அதுகேட்டு மதுகண்டிகை சொல்லலாயிற்று:- "கேளாய், ரஸிகமாமா, நீயோ தீராத பிடிவாதக்காரனாக இருக்கிறாய். அலையைக் கட்டலாம்; காற்றை நிறுத்தலாம்; மனவுறுதிக் கொண்ட தீரனுடைய தீர்மானத்தை யாவராலும் தடுக்க முடியாது. உன்னிடமிருக்கும் இந்த மனவுறுதியைக் கண்டு உன்மேல் எனக்கு நட்புண்டாகிறது. அது நிற்க, இப்போது நான் உனக்கொரு ரகஸ்யம் சொல்லுகிறேன். அதை சாவதானமாகக் கேள். மலையடிவாரத்திலுள்ள மந்தபுரம் என்ற கிராமத்தில் அரச மரத்தடியிலே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது. நாள்தோறும் காலையொருமுறை மாலையொருமுறை அந்தக் கோயிலுக்குப் போய்த் தலையில் மூன்று குட்டுக் குட்டிக் கொள். மூன்று தோப்புக்கரணம் போடு. 'பிள்ளையாரே, பிள்ளையாரே, எனக்குச் சங்கீத ஞானம் வேண்டும்' என்று கூவு. பாட்டு தானே வரும். இதற்கு யாதொரு குருவும் வேண்டியதில்லை" என்றது. "உண்மைதானா?" என்று கழுதை சற்றே ஐயத்துடன் கேட்டது. அதற்குக் குயில் சொல்லுகிறது:- "எனக்கு இந்த மாதிரி தான் சங்கீதம் வந்தது. எல்லாக் குயில்களுக்கும் இப்படித் தான். எங்கள் ஜாதியாருக்கு மாத்திரந்தான் இந்த ரகஸ்யம் தெரியும். இதுவரை இதர ஜாதியாரிடம் சொல்லியதில்லை. நான் உன்னிடமுள்ள அன்பினாலே சொன்னேன்" என்றது. சரியென்று சொல்லி ரஸிக சிரோமணி துள்ளிக் குதித்துக் கொண்டு போய், மறுநாள் பொழுது விடிந்தவுடனே மந்தபுரத்துப் பிள்ளையார் கோவிலுக்கு முன்னே வந்து நின்று கொண்டு, குயில் சொன்ன கிரியைகளெல்லாம் முடித்துத் தன்னுடைய பாஷையில் பாட்டு வர மேண்டுமென்று கூவத் தொடங்கிற்று. உடனே கோயிலில் வந்து பிரதக்ஷிணம் முதலியன செய்துகொண்டிருந்த அடியார்கள் இந்த இரைச்சலைப் பொறுக்க மாட்டாமல் கழுதையைக் கல்லாலெறிந்து காலையொடித்துத் துரத்திவிட்டார்கள். ஆதலால், தனக்கு இயற்கையில் கிடைக்கக் கூடாத பொருளை விரும்பி எவனும் வீணாசை கொள்ளலாகாதென்று விவேக சாஸ்திரி தனது மக்களிடம் கதை சொன்னார். |