அப்போது காளிதாஸன் என்ற பிள்ளை கேட்கிறான்:- "கழுதைக்குத் துன்பம் நேரிடவேண்டுமென்ற கெட்ட எண்ணத்துடன் போதனை செய்த குயிலுக்கு ஒரு தண்டனையுமில்லையா?" என. ஆஞ்சனேயன் என்ற மற்றொரு மகன் - "அப்பா, அந்தக் கழுதை ஸ்வாமியை வந்து கும்பிட்டதே; அதற்குத் தீங்கு வரலாமோ?" என்று கேட்டான். அதற்கு விவேக சாஸ்திரி சொல்லுகிறார்: - "தெய்வபக்திக்கு நல்ல பயனுண்டு. ஆனால் அதனுடன் விவேகம் சேர்ந்திருக்க வேண்டும். விவேகமில்லாதவனுடைய தெய்வபக்திக்கு உறுதி கிடையாது. தெய்வத்தினிடம் ஒருவன் வரங்கேட்கப் போகையிலே முதலாவது விவேகம் கேட்கவேண்டும். விவேகமே இந்த உலகத்தில் எல்லாவிதமான செல்வங்களுக்கும் ஆரம்பம். விவேகமில்லாதவன் குருடன். விவேகத்துடன் சேர்ந்த தெய்வபக்தியே உண்மையானது. அவ்விதமான தெய்வ பக்தியினால் ஒருவன் எடுத்த காரியத்தில் ஜயமடையலாம். இதைக் குறித்து ஒரு கதை சொல்லுகிறேன்" என்றார். "அந்தக் கதைக்குப் பெயரென்ன?" என்று பிள்ளைகள் கேட்டார்கள். "காட்டுக் கோயில்" என்று விவேக சாஸ்திரி சொன்னார். அப்போது காளிதாஸன்: - "அப்பா, நான் கேட்டது சொல்லவில்லையே?" என்றான். ஆஞ்சனேயன்: - "விவேகமில்லாதவன் தெய்வபக்தி செய்தால், அதனால் அவனுக்குத் தீமைதான் விளையுமா?" என்று மறுபடி கேட்டான். |