இதைக் கேட்டுச் சிங்கம் புன்னகை கொண்டு, சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு, "சரி, நீ நம்முடைய அரண்மனையில் சேவகம் செய்து கொண்டிரு" என்றாக்கினை செய்தது. மறுநாட் காலையில் வீரவர்மனிடம் அதன் கிழ மந்திரியாகிய தந்திரசேனன் என்ற நரி வந்து சொல்லலாயிற்று:- "அரசனே, நேற்றுத் தம்மிடம் விகாரன் என்ற பேய்க்காட்டு நரி வந்து பேசியதாகவும் அவனைத் தாம் அரண்மனை வேலையில் நியமித்துக்கொண்டதாகவும் கேள்விப்பட்டேன். என்னிடம் ஆலோசனை செய்யாமல் தாம் இந்தக் காரியம் செய்தது பற்றி நான் வருத்தப்படுகிறேன். ராஜ்ய நீதியில் சிறந்த ஞானமுடைய தாம் புறத்து நரியை, தன்னரசன் காரியத்தை நடத்தத் திறமையில்லாமலோ துரோகத்தாலோ வெளிப்பட்டு வந்திருக்கும் நரியை முன் சரித்திரந் தெரியாத நரியை, இத்தனை அவசரப்பட்டு நம்பின செய்கையை நினைக்கும்போது, எனக்கு ஆச்சரியமுண்டாகிறது" என்றது. இதைக் கேட்ட வீரவர்மன் நகைத்து 'நீர் சாஸ்திரத்தை நம்பிச் சொல்லுகிறீர். நான் தெய்வத்தை நம்பிச் செய்தேன்' என்றது. அப்போது தந்திரசேனன் என்கிற கிழ நரி சொல்லுகிறது:- "எவன் சாஸ்திரத்தை நம்புகிறானோ' அவனே தெய்வத்தை நம்புகிறான். உலகத்தின் அனுபவமே தெய்வத்தின் வாக்கு. அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது சரியான சாஸ்திரம். நான் லோகானுபவத்தை ஆதாரமாகக் கொண்டு சொல்லுகிறேன். இது தெய்வத்தால் ஏற்பட்டதேயன்றி வேறில்லை. ஆதலால் நான் சாஸ்திரத்தை நம்புவதாகவும், தாம் தெய்வத்தை நம்புவதாகவும், பேதப்படுத்திச் சொல்வதின் பொருள் எனக்கு விளங்கவில்லை" என்றது. சிங்கம் மறுமொழியே சொல்லவில்லை. சிறிது நேரம் சும்மா காத்திருந்துவிட்டு, "மௌனம் ஸர்வார்த்த ஸாதகம்" என்றெண்ணிக் கிழ நரி விடை பெற்றுச் சென்றது. அப்போது சிங்கம் விகாரன் என்ற பேய்க்காட்டு நரியைத் தன் முன்னே அழைப்பித்துப் பின்வருமாறு கேட்டது:- |