"விகாரா, தண்டிராஜன் உனது பிதாவின் ஸ்தானத்தில் உன்னை நியமிக்காமல், கண்டகனை நியமித்த காரணமென்ன? உன்னிடமிருந்த பிழையென்ன?" நரி சொல்லுகிறது:- "என் பிரானே, நான் யாதொரு குற்றமும் செய்யவில்லை. ஒரு வேளை என் வயதுக் குறையை எண்ணிச் செய்திருக்கலாம். மந்திரித் தொழிலுக்குக் கிழவனே தகுதியென்று மதியில்லாத ராஜாக்கள் நினைக்கிறார்கள். மேலும், "நற்றா மரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போற் கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர், முதுகாட்டிற் காக்கை யுகக்கும் பிணம்" என்றது. அப்போது சிங்கம் "உங்களுடைய தண்டிராஜனுக்கும் எனக்கும் பகையென்பதை நீ அறிவாயா?" என்று கேட்டது. "அறிவேன்" என்று நரி சொல்லிற்று. "தன்னரசனைக் கைவிட்டுப் பகையரசனைச் சார்ந்து வாழவிரும்பும் மந்திரிக்குப் பெயர் தெரியுமா?" என்று வீரவர்மன் கேட்டது. "அவன் பெயர் துரோகி" என்று விகாரன் சொல்லிற்று. சிங்கம் நகைத்தது. "உன்னுடைய குலதெய்வத்தின் பெயரென்ன?" என்று சிங்கம் கேட்டது. |