பக்கம் எண் :

காட்டுக்கோயிலின் கதை

"காட்டுக் கோயில் மாகாளி" என்று நரி சொல்லிற்று. சிங்கத்தின் உடம்பில் நடுக்கமுண்டாயிற்று. உடனே 'ஹா' என்று கத்திச் சிங்கம் தனது கையை உயர்த்திக்கொண்டு சொல்லுகிறது:

"மூட நரியே! எது நேர்ந்தாலும் உன்னைக் கொல்லக் கூடாதென்று நேற்றே என் மனதில் தீர்மானம் செய்து கொண்டபடியால், இப்போது உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். என்னிடம் நீ பொய் சொல்லுகிறாயா? சொல் உண்மையை. உனது குல தெய்வத்தின் பெயரென்ன?" என்று உறுமிக் கேட்டது. விகாரனென்ற நரி நடுங்கிப் போய்ப் பின்வருமாறு சொல்லலாயிற்று.

நரி சொல்லுகிறது:- "ஐயனே, என்னுடைய பூர்வ குல தெய்வம் அதாவது என்னுடைய முன்னோரும் நேற்று வரை நானும் கும்பிட்டு வந்த தெய்வம் வேறு. அதன் பெயர் பேய் நாகன். அந்த தெய்வமே எங்கள் பேய்காட்டுக் காவல் நடத்தி வருகிறது. பேய்க்காட்டரசனாகிய தண்டிராஜனுக்கும் அவனுடைய குடிகள் எல்லோருக்கும் அதுவே குலதெய்வம். பரம்பரை வழக்கத்தால் எனது பிறப்பு முதல் நேற்று தங்களுடைய சந்நிதானத்தைத் தரிசனம் பண்ணும் வரை நானும் பேய் நாகனையே குலதெய்வமாகக் கொண்டாடினேன். தண்டிராஜனுடன் மனஸ்தாபப்பட்டு வெளியேறின கால முதலாக யாதொரு சரணுமில்லாமல் அலைந்து எனக்கு நேற்று இவ்விடத்து சந்நிதானத்தில் அபயங்கொடுத்தவுடனே, எனக்குச் சந்நிதானமே அரசனும், குருவும், தெய்வமும் ஆகிவிட்டபடியால், இவ்விடத்துக்கு குலதெய்வத்தின் பெயர் காட்டுக் கோயில் மாகாளி என்பதைத் தெரிந்து கொண்டு, அந்த மகா சக்தியையே எனக்கும் குலதெய்வமாக வரித்துக்கொண்டேன்" என்றது.