இதைக்கேட்டு 'வீரவர்மன்' காடு குலுங்கும்படி கோப நகை நகைத்துச் சொல்லுகிறது:- "இன்னும் பொய் சொல்லுகிறாய். உன்னை மீளவும் க்ஷமிக்கிறேன். நேற்று உன்னைப் பார்த்தவுடனே கொல்ல நினைத்தேன். நீ சரணமென்று காலில் விழுந்தபடியால் துரோகியொருவன் வஞ்சகமாக அடைக்கலம் புகுந்தாலும் அவனைக் கொல்லாமல் விடுவது வீரருக்கு லக்ஷணமென்று நினைத்து உன்னைக் கொல்வதில்லை யென்று மனதில் நிர்ணயம் செய்து கொண்டேன். ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேள். நீ நம்மிடம் உளவு பார்க்க வந்த ஒற்றன். அந்த முழு மூடனாகிய தண்டிராஜன் உன்னை இங்கே அனுப்பியிருக்கிறான். நான் இஷ்டப்படும் வரையில் இனி அவனுடைய முகத்தை நீ பார்க்கப் போவதில்லை. உன்னை நம்முடைய அரண்மனையில் வைத்துக் கொள்ளுவேன். ஆனால் என்னுடைய அனுமதியின்றி நீ பொன்னங் காட்டை விட்டு வெளியேறக்கூடாது. அப்படி வெளியேற முயன்றால் உன்னுடைய நான்கு கால்களையும் வெட்டிவிடச் செய்வேன், தெரிகிறதா?" விகாரன்:- "ஐயனே, என் விஷயமாக சந்நிதானத்தினிடம் யாரோ பொய்க் கதை சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. பொறாமையினாலே செய்திருக்கிறார்கள். எனக்கும் தண்டிராஜனுக்கும் விரோதமென்பதைத் தாங்கள் பேய்க் காட்டுக்கு ஆளனுப்பி விசாரித்துவிட்டு வரும்படி செய்யலாம். அங்கே யாரிடம் கேட்டாலும் சொல்லுவார்கள். இது பொய் வார்த்தையில்லை. காரணம் நேற்றே தெரிவிக்க வில்லையா? என்னுடைய பிதா வகித்த மந்திரி ஸ்தானத்தை அவன் எனக்குக் கொடுக்காமல் அந்த ஓநாய்க்குக் கொடுத்தான். அதிலிருந்து விரோதம். என்னை ஒன்றும் செய்யவேண்டாம். எனக்குத் தாங்களே குரு, தாங்களே பிதா, தாங்களே தெய்வம். தங்களைத் தவிர எனக்கு இப்போது வேறு கதியில்லை" என்றது. |