அதற்கு வீரவர்மன்:- "சரி, இனிமேல் பொய் சொன்னால் அவசியம் கண்ணிரண்டையும் பிடுங்கி விடுவேன் சொல்லு, அந்த தண்டிராஜனிடம் சைனியங்கள் எவ்வளவிருக்கின்றன?" விகாரன்:- "ராஜாதி ராஜனே, நான் அந்தக் காட்டில் எவ்விதமான அதிகாரமும் வகிக்கப்பெறவில்லை. சைனிய உளவுகள் எனக்கெப்படித் தெரியும்?" இதைக் கேட்டவுடனே சிங்கம் "யாரடா அங்கே சேவகன்?" என்று கர்ஜனை செய்தது. உடனே ஒரு ஓநாய் ஓடி வந்து பணிந்து நின்றது. அதை நோக்கி வீரவர்மன் "ஸேனாபதியை உடனே அழைத்துவா என்று ஆக்கினை செய்தது. "உத்தரவுப்படி" என்று சொல்லி ஓநாய் வணங்கிச் சென்றது. பிறகு வீரவர்மன் நரியை நோக்கிச் சொல்லுகிறது:- "விகாரா, நமது ஸேனாபதியாகிய அக்னிகோபன் இன்னும் ஐந்து நிமிஷங்களுக்குள் இங்கே வந்து விடுவான். அவன் வருமுன்பு நான் கேட்கிற கேள்விகளுக்கு நீ தவறாமல் உண்மை சொல்லக் கடவாய். இதோ என் முகத்தைப் பார்" என்றது. நரி குடல் நடுங்கிப் போய்ச் சிங்கத்தின் முகத்தைச் சற்றே நிமிர்ந்து பார்த்தது. இன்மேல் இந்தச் சிங்கத்தினிடம் பொய் சொன்னால் உயிர் மிஞ்சாதென்று நரிக்கு நல்ல நிச்சயம் ஏற்பட்டு விட்டது. பிறகு நரி சொல்லுகிறது:- "ஸ்வாமி, நான் சொல்லுகிற கணக்குத் தவறினாலும் தவறக் கூடும். எனக்குத் தெரிந்தவரையில் உண்மை சொல்லி விடுகிறேன். எனக்கு எவ்வித தண்டனையும் விதிக்க வேண்டாம். எனக்கு உங்களுடைய பாதமே துணை" - என்றது. |