பக்கம் எண் :

காட்டுக்கோயிலின் கதை

வீரவர்மன்: - "பேய்க்காட்டு சைனியம் எவ்வளவு? உடனே சொல்லு. உண்மை சொல்லு."

விகாரன்: - "புலிப்படை முந்நூறு, கரடி இருநூறு, காண்டா மிருகம் நூறு, ஓநாய் ஆயிரம், ஆனைப் படை ஆயிரம், நரிப்படை நாலாயிரம்."

வீரவர்மன்: - "உளவு பார்த்து வரும் காக்கைகள் எத்தனை?"

விகா: - "இருநூற்றைம்பது."

வீர: - "சுமை தூக்கும் ஒட்டகை எத்தனை? கழுதை எத்தனை?"

விகா: - "ஒட்டகை எண்ணூறு. கழுதை பதினாயிரம்."

வீரா: - "எத்தனை நாள் உணவு சேகரித்து வைத்திருக்கிறான்?"

விகா: - "ஞாபகமில்லை."

வீரா: - "கண் பத்திரம்."

விகா: - சத்தியம் சொல்லுகிறேன்; ஞாபகமில்லை."

இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் ஸேனாபதியாகிய அக்கோபன் என்ற வேங்கைப்புலி வந்து கும்பிட்டு நின்றது.

"வருக" என்றது சிங்கம்.

அப்போது விகாரன் என்ற நரி தன் மனதுக்குள்ளே யோசனை பண்ணிக்கொள்ளுகிறது:

"ஹூம்! இந்தச் சிங்கராஜன் மகா வீரனாகவும், மகா கோபியாகவும் இருந்தாலும் நாம் நினைத்தபடி அத்தனை புத்திசாலியில்லை. நம்மை எதிரியின் ஒற்றனென்று தெரிந்து கொண்ட பிறகும் நம்மை வைத்துக்கொண்டு சேனாபதியிடம் யுத்த விசாரணை செய்யப்போகிறான். ஏதேனும், ஒரு யதிர்ச்சா வசத்தால் இவனுடைய காவலிலிருந்து நாம் தப்பியோடும்படி நேரிட்டால், பிறகு இவனுடைய யுத்த மர்மங்களை நாம் தண்டிராஜனிடம் சொல்லக் கூடுமென்பதை இவன் யோசிக்கவில்லை. இவனுக்குத் தீர்க்காலோசனை போதாது."