இங்ஙனம், நரி பலவாறு சிந்தனை செய்யுமிடையே, வாயிற்காப்பனாகிய ஓநாய் ஓடிவந்து "மகாராஜா, புரோகிதர் வந்திருக்கிறார்" என்றது. "உள்ளே வரச்சொல்லு" என்று வீரவர்மன் கட்டளையிட்டது. அப்பால், அங்கிரன் என்ற பெயர்கொண்டதும், வீரவர்மனுடைய குலத்துக்குப் பரம்பரையாகப் புரோகிதஞ் செய்யும் வமிசத்தில் பிறந்ததும், பெரிய மதி வலிமை கொண்டதுமாகிய கிழப்பருந்து பறந்து வந்து சிங்கத்தின் முன்னே வீற்றிருந்தது. சிங்கம் எழுந்து வணங்கிற்று. சிறிது நேரம் உபசார வார்த்தைகள் சொல்லிக் கொண்ட பிறகு புரோகிதப் பருந்து சிங்கத்தை நோக்கி:- "அந்த நரிதான் பேய்க்காட்டு விகாரனோ?" என்று கேட்டது. சிங்கம் `ஆம்' என்றது. நரி திருடன் போலே விழித்தது. அப்போது சிங்கம் சொல்லுகிறது:- "ஸ்வாமி, இந்த நரியை நான் நயத்தாலும் பயத்தாலும் எனது பக்கம் சேரும்படி சொல்லிவிட்டேன். இவன் தண்டிராஜனிட மிருந்த அன்பை நீக்கி என்னாளாகி விட்டான். இவனை நான் இப்போது நம்முடைய மந்திரி சபையில் இருக்க இடங்கொடுத்ததினாலேயே நான் இவனிடம் பரிபூர்ண நம்பிக்கை கொண்டிருக்கிறேனென்பதைத் தாங்கள் தெரிந்து கொள்ளலாம். இவனுடைய பழைய நினைப்பை மறந்து இப்போது தண்டிராஜனுடைய உளவுகளை நமக்குத் தெரிவிக்கும் தொழிலில் அமர்ந்திருக்கிறான். அதனாலே தான் நமது சபையில் இவனைச் சேர்க்கும்படியாகிறது" என்றது. |