பருந்து புன்னகை செய்தது. ஒன்றும் சொல்லவில்லை. அப்போது சிங்கம் கேட்கிறது:- "ஸ்வாமி, ஒருவன் எதிர்பார்க்காத காரியத்தில் எதிர் பார்க்காதபடி ஆச்சரியமான வெற்றியடைய வேண்டுமானால் அதற்கு வழியென்ன?" என்றது. அப்போது அங்கிரன் என்ற புரோகிதப் பருந்து சொல்லுகிறது:- "அரசனே, மந்திரி சபையில் எதிர்பார்க்காத கேள்வி கேட்டாய். உனக்கு நான் மறுமொழி சொல்ல வேண்டுமானால், அதற்கு நீண்ட கதை சொல்லும்படி நேரிடும். மந்திராலோசனை சபையில் முக்கியமான காரியத்தை விட்டுப் புரோகிதனிடம் கதை கேட்க வேண்டுமென்ற சித்தம் உனக்குண்டானால் நான் சொல்வதில் ஆக்ஷேபமில்லை. நேரம் அதிகப்படும். அதுகொண்டு என்னிடம் கோபம் வரக்கூடாது" என்றது. அப்போது சிங்கம் ஒரு துளி சிரிப்போடு சொல்லுகிறது: - "மந்திர சபை பின்னாலேயே தள்ளி வைத்துக் கொண்டோம். இப்போது கதை நடக்குக" என்றது. உடனே, புரோகிதனாகிய அங்கிரன் என்ற பருந்து சொல்லுகிறது. |