பக்கம் எண் :

இரண்டாம் பகுதி - நம்பிக்கை (திண்ணன் என்ற மறவன் கதை)

கேளாய் ராஜகேஸரியாகிய வீரவர்மனே, முன்னொரு காலத்தில் மதுரையிலே விக்கிரம பாண்டியன் அரசு செலுத்தியபோது காலாட்படையிலே திண்ணன் என்றொரு மறவன் இருந்தான். அவன் ஒரு நாள் மாலையில் அரண்மனைப் பக்கமாக நடந்து போகையில் உச்சி மாடத்தின் மேலே பாண்டியன் மகளாகிய தர்மலக்ஷ்மி என்ற பெண் பந்தாடிக் கொண்டிருந்ததைக் கண்டு மிகவும் காதல் கொண்டவனாய் அவளை மணம் செய்துகொள்ள வேண்டுமென்று விரும்பினான். அப்பால் அவன் ஒரு சோதிட சாஸ்திரியினிடம் போய், "ஒருவன் ராஜாவின் மகளை மணம் செய்துகொள்ள விரும்பினால் அதற்கு எவ்விதமான பூஜை நடத்த வேண்டும்?" என்று கேட்டான்.

"நீ யார்? உனக்கென்ன தொழில்?" என்று சோதிடன் கேட்டான்.

"நான் காலாட்படை மறவன். என் பெயர் திண்ணன்" என்று இவன் சொன்னான்.