பக்கம் எண் :

திண்ணன் என்ற மறவன் கதை

"மன்னன் மகளே, காலாள் மறவன்

என்ன செய்தால், உன்னைப் பெறலாம்?"

என்ற வாக்கியத்தை எழுதி, அந்த நறுக்கோலையை மிகவும் அழகானதொரு பூமாலைக்குள் நுழைத்து வைத்து, அந்தப் பூவாணிச்சிப் பெண்ணிடம் கொடுத்து "நீ இதை அரசன் மகள் முன்னாலே கொண்டு போய் ஒரு தரம் உதறி விட்டு மாலையை அவளிடம் கொடு" என்று சொல்லியனுப்பினான். அவளும் அப்படியே பூமாலையைக் கொண்டு ராஜகுமாரியின் முன்னே ஒரு தரம் உதறிய பின்பு, அதைக் கொடுத்துவிட்டுத் திரும்பி வீடு வந்து சேர்ந்தாள். ராஜகுமாரி அந்த நறுக்கோலை கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு அதையெடுத்து வாசித்தாள்:-

"மன்னன் மகளே, காலாள் மறவன்

என்ன செய்தால் உன்னைப் பெறலாம்?"

அங்கிரன் என்ற புரோகிதப் பருந்து சொல்லுகிறது:-

கேளாய் வீரவர்ம ராஜனே, அந்தப் பூவாணிச்சிப் பெண் மாலையை உதறினபோது நறுக்கோலை கீழே விழுவதை ராஜகுமாரி பார்த்தாள். பூவாணிச்சிப் பெண் அரண்மனையிலிருந்து தன் வீட்டுக்குத் திரும்பிப் போனவுடனே திண்ணன் அவளைக் கண்டு "ராஜகுமாரியிடம் மாலையைக் கொடுத்தாயா?" என்று கேட்டான். ஆமென்றாள். "உதறினாயா?" என்று கேட்டான். "செய்தேன்" என்றாள். சரியென்று சொல்லிப் போய் விட்டான். மறுநாட் காலையில் பூவாணிச்சிப் பெண் வழக்கம் போலே அரண்மனைக்கு மாலை கொண்டு போனாள். அப்போது ராஜகுமாரி அந்தப் பெண்ணிடம் ஒரு நறுக்கோலையைக் கொடுத்து "நேற்று உன்னிடம் மாலை கொண்டு தந்த காலாள் மறவனிடம் இதைக் கொண்டு கொடு" என்றாள்.