பூவாணிச்சிப் பெண் திகைத்துப் போய்விட்டாள். "பயப்படாதே; கொண்டுபோ" என்று ராஜகுமாரி சொன்னாள். பூவாணிச்சிப்பெண் நறுக்கோலையைக் கொண்டு திண்ணனிடம் கொடுத்தாள். அவன் வாசித்துப் பார்த்தான். அதிலே "தெய்வமுண்டு" என்றெழுதி யிருந்தது. பின்னொரு நாள் திண்ணன் தனியேயிருந்து யோசிக்கிறான்: - "இந்த அரசன் மகள் நம்மைப் பரிகாஸம் பண்ணமாட்டாள். ஏதோ நல்ல வழிதான் காட்டியிருக்கிறாள். தெய்வத்தை நம்பினால் பயன் கிடைக்குமென்று சொல்லுகிறாள். சரி. அப்படியே நம்புவோம்......அந்தக் காலத்தில் தெய்வம் தவம் பண்ணுவோருக்கு நேரே வந்து வரம் கொடுத்ததென்று சொல்லுகிறார்கள். இந்த நாளில் அப்படி நடப்பதைக் காணோம்......அடா போ! பழைய காலமேது? புதிய காலமேது? தெய்வம் எந்தக் காலத்திலும் உண்டு. தெய்வத்தைக் குறித்துத் தவம் பண்ணுவோம். வழி கிடைக்கும்" என்று சொல்லி ஒரு காட்டுக்குப் போய், அங்கே காய்கனிகளைத் தின்று சுனை நீரைக் குடித்துக் கொண்டு தியானத்திலே நாள் கடத்தினான். அந்தக் காட்டில் இவனுக்கும் ஒரு வேடனுக்கும் பழக்கமுண்டாயிற்று. அந்த வேடன் இவனுடைய தவப்பெருமையையும் இவன் முகவொளியையும் கண்டு, இவனிடம் மிகுந்த பிரியங் கொண்டவனாய் இவனுக்கு மிகவும் சுவையுடைய தேனும் கிழங்குகளும் கொண்டு கொடுப்பான். இவன் வேடனுக்கு தெய்வபக்தி யேற்படுத்தினான். ஒருநாள் அந்த வேடன் இவனிடம் ஒரு மூலிகை கொண்டு கொடுத்து, "இது மிகவும் ரகஸ்யமான மூலிகை. இதைப் பத்திரமாக வைத்துக்கொள்ளு. ஒருவனுடம்பில் எத்தனை பெரிய புண் இருந்தாலும், இந்த மூலிகையில் தினையளவு அரைத்துப் பூசினால், |