பக்கம் எண் :

திண்ணன் என்ற மறவன் கதை

புண் இரண்டு ஜாமத்துக்குள் ஆறிப் போய் விடும்" என்றான். அதை இவன் பத்திரமாக வைத்துக் கொண்டான். திண்ணன் குடியிருந்த பர்ண சாலைக்கருகே ஒரு பாம்புப் புற்றிருந்தது. அதில் கிழ நாகம் ஒன்று வசித்தது. அதை ஒரு நாள் வேடன் கண்டு கொல்லப் போனான். அப்போது திண்ணன்:- "ஐயோ பாவம்! கிழப்பாம்பு அதைக் கொல்லாதே. அது நெடு நாளாக இங்கிருக்கிறது. என்னை ஒன்றும் செய்வதில்லை. அதன் வழிக்கு போகாதே" என்று சொல்லித் தடுத்து விட்டான். பின்னொரு நாள் அந்தப் பாம்பு தனியே செத்துக் கிடந்தது. அந்தப் பாம்பு சாகும்போது கக்கினதோ வேறென்ன விநோதமோ - அந்தப் பாம்புக்கருகே ஒரு பெரிய ரத்தினம் கிடந்தது. அதை நாகரத்தின மென்று திண்ணன் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டான்; அன்றிரவிலே திண்ணன் ஒரு கனவு கண்டான். அதில் அவனுடைய இஷ்ட தேவதையாகிய மீனாக்ஷியம்மை தோன்றி, "உனது தவத்தால் மகிழ்ந்து உனக்கு நாகரத்தினம் கொடுத்தேன். இதைக் கொண்டு போய் சௌக்யமாக வாழ்ந்துகொண்டிரு" என்றாள். திண்ணன் அந்தக் கனவை நம்பவில்லை.

"நம்முடைய நினைவினாலேயே இந்தக் கனவுண்டாயிருக்கிறது. தெய்வமாக இருந்தால், ராஜகுமாரி வேண்டுமென்று தவஞ்செய்ய வந்தவனிடம் நாகரத்தினத்தைக் கொடுத்து வீட்டுக்குப் போகச் சொல்லுமா? செய்யாது. ஆதலால் இந்தக் கனவு தெய்வச் செய்கையன்று, நம்முடைய மனதின் செய்கை" என்று தீர்மானம் செய்து, அந்தக் காட்டிலேயே எப்போதும்போல தவஞ் செய்து கொண்டிருந்தான்.

பிறகொரு நாள், அந்தக் காட்டில் விக்கிரம பாண்டியன் வேட்டைக்கு வந்தான். அவன் திண்ணனைக் கண்டு "நீர் யார்? இந்த வனத்தில் எத்தனைக் காலமாகத் தவம் செய்கிறீர்?" என்று கேட்டான். அப்போது திண்ணன் சொல்லுகிறான்: -