"நான் பாண்டிய நாட்டு மறவன். என் பெயர் திண்ணன். இங்குப் பல வருஷங்களாகத் தவஞ்செய்கிறேன், காலக் கணக்கு மறந்துபோய் விட்டது" என்றான். "என்னைத் தெரியுமா? நான் பாண்டிய நாட்டரசன்" என்று பாண்டியன் சொன்னான். "தெரியும்" என்று திண்ணன் சொன்னான். அரசன் இந்த மறவனுடைய அழகையும், ஒளியையும் கண்டு வியந்து:- "இந்த இளமைப் பிராயத்தில் இவ்வனத்திலே என்ன கருத்துடன் தவம் செய்கிறீர்?" என்று கேட்டான். "மதுரை யரசன் மகளை மணம் செய்யவேண்டித் தவம் செய்கிறேன்" என்று திண்ணன் சொன்னான். அரசன் திகைப்படைந்து போய், "எங்ஙனம் கைகூடும்! அம்மவோ" என்றான். "மீனாக்ஷி கேட்ட வரம் கொடுப்பாள்" என்று திண்ணன் சொன்னான். "மன்னன் மகளுக்கு நீ என்ன பரிசம் கொடுப்பாய்?" என்று பாண்டியன் கேட்டான். "புண்ணைத் தீர்க்க மூலிகையும், மண்ணைச் சேர்க்க நாகரத்தினமும் கொடுப்பேன்" என்று திண்ணன் சொன்னான். அரசன் அவ்விரண்டையும் காட்டும்படி சொன்னான். திண்ணன் காட்டினான். வேட்டையிலே புண்பட்ட மானுக்கு அந்த மூலைகையை அரைத்துப் பூசினார்கள். உடனே புண்தீர்ந்து விட்டது. |