இந்தத் திண்ணனுடைய தவப்பெருமையும், அதனாலே கைகூடிய தெய்வ அருளும் அவன் முதத்திலும், விழியிலும் சொல்லிலும், செய்கையிலும் விளங்குவது கண்டு பாண்டியன் மனமகிழ்ச்சியுடன், அவனுக்கே தனது மகளை மணஞ்செய்து கொடுத்தான். ஆதலால், எதிர்பார்க்க முடியாத பயன் உலகத்தார் கண்டு வியக்கும்வண்ணமாக ஒருவனுக்குக் கைகூடவேண்டுமானால் அதற்குத் தெய்வ பக்தியே உபாயம்" என்று பருந்து சொல்லிற்று. அப்போது அந்த சபையிலே சேனாபதி அக்நிகோபன் மகனாகிய ரணகுமாரன் என்ற இளம்புலியும், தந்திரசேனன் மகன் உபாய வஜ்ரன் என்ற நரியும், வேறு பல புலி, நரிகளும், தம்முடன் உடம்பு முழுதும் புண்பட்டு இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்த சிங்கமொன்றை இழுத்துக்கொண்டு ராஜசபையில் உத்தரவு பெற்றுக்கொண்டு வந்து வணங்கி நின்றன.
அந்தப் புண்பட்ட, கைதிச் சிங்கம் யாரென்றால், அது தான் பேய்க்காட் டரசனாகிய தண்டிராஜன்! இந்த ஆச்சரிய விளைவைக் கண்டு வீரவர்மன் புன்னகை செய்தது. விகாரன் என்ற பேய்க்காட்டு நரி மூர்ச்சை போட்டு விழுந்தது. புரோகிதர். சேனாபதிகள் வீரவர்மனை வாழ்த்தி அவனுடைய சத்துரு இத்தனை நாளாகக் கைதிப்பட்டு வந்த மகிழ்ச்சியை விழியினாலே தெரிவித்தன. |