பக்கம் எண் :

இரண்டாம் பகுதி - நம்பிக்கை (உபாயவஜ்ரன் என்ற நரியின் திறமை)

அப்போது வீரவர்மன் ரணகுமாரனையும் அவன் தந்தையாகிய சேனாபதி அக்நிகோபனையும் நோக்கி மிகவும் மகிழ்ச்சி பாராட்டி ரணகுமாரனுக்குப் பதவியும் பட்டமும் மேம்படச் செய்தது. பிறகு உபாயவஜ்ரனை நோக்கிப் "பிள்ளாய்; இனிமேல் நீயும் நமது சபையில் ஒரு மந்திரியாகக் கடவாய்" என்றது.

அங்கு மேலெல்லாம் இரத்தமொழுக, ஒரு கண்ணிலும் இரத்தம் வழியத் தலைகவிழ்ந்து நின்ற தண்டி ராஜனுக்கு உபசார வார்த்தைகள் சொல்லி, உள்ளே அனுப்பி ராஜவைத்தியர் மூலமாகச் சிகிச்சை செய்விக்கும்படி ராஜாக்கினை பிறந்தது.

அப்பால் வீரவர்மன்:-

"உபாயவஜ்ரா, நீ புறப்பட்டது முதல், தண்டி ராஜனுடன் நமது சபை முன்பு தோன்றிய காலம் வரை நடந்த விருத்தாந்தங்களையெல்லாம் ஒன்று விடாதபடி சொல்லு" என்றது.

உபாயவஜ்ரன் ராஜ சபையில் விஞ்ஞாபனம் செய்கிறது:-

"சக்திவேல் ராஜேசுவரா! பொன்னங்காட்டிலிருந்து புறப்பட்டு நாகமலைக்குப் போகும்வரை விசேஷமொன்றும் நடக்கவில்லை. அங்கு காசுக் குகையில் ரணகுமாரர் தமது பரிவாரங்களுடன் இருப்பதைக் கண்டேன். ராஜாக்கினை இப்படியென்று தெரிவித்தேன். அவர் தமக்கும் அவ்விதமாகவே உத்தரவு கிடைத்திருப்பதாகச் சொல்லி வழித்துணைக்கு யார் யார் வேண்டுமென்று கேட்டார். குடிலப்பன் என்ற குள்ள நரியையும், விளக்கண்ணன் என்ற வேட்டை நாயையும், தொளைச்சாண்டி என்ற மூஞ்சூற்றையும், கிழக்கரியன் என்ற காக்கையையும் அழைத்துக் கொண்டு போனேன்."