பக்கம் எண் :

இரண்டாம் பகுதி - நம்பிக்கை (சூனியக் குகையில் மந்திராலோசனை)

உபாயவஜ்ரன் தெரிவித்துக் கொள்ளுகிறது:-

"பிறகு நள்ளிரவில், காரிருள் நேரத்திலே நானும் கரடிச்சாத்தானுமாக நாகமலையிலுள்ள சூனியக் குகையில் போய் இருந்து கொண்டு ஆலோசனை செய்யலானோம். எடுத்தவுடனே சாத்தான் தக்ஷிணை விஷயம் பேசினான். கையிலே கொண்டு போயிருந்த வஸ்துவை அவன் மடியில் வைத்தேன். அதை உடனே ஒரு பொந்துக்குள்ளே சென்று நுழைத்து வைத்துவிட்டு என்னிடம் திரும்பி வந்தான். பிறகு கொஞ்சம் பிணங்கத் தொடங்கினான். "துஷ்ட நிக்ரஹத்திலே கூட ஒரு வைப்பு வரம்பிருக்க வேண்டும். ஸ்வாமித் துரோகம் செய்யலாகாது. வீட்டுமனும், துரோணனும் உள்ளத்தில் பாண்டவரை உகந்தாலும், உயிரைத் துரியோதனனுக்காக இழந்தனர். ஆதலால் தண்டி ராஜனுடைய சரீரத்துக்கு ஹானி வராதபடி என்னாலாகவேண்டிய உதவியைக் கேட்டால் நான் செய்வேன்" என்றான்.