"தண்டிராஜனை எங்கள் நாகமலையிலுள்ள காசுக் குகையிலே கொண்டு சேர்ப்பிக்க வேண்டும்" என்றேன். "சீச்சீ! கோழைகளா!" என்றான். வாளை உருவினேன். கும்பிட்டு மன்னிக்கும்படி கேட்டான். பிறகு "அந்தக் காரியம் செய்யமாட்டேன்" என்று உறுதியாகச் சொல்லிவிட்டான். "ஹோமத்துக்கு வருவானா?" என்று கேட்டேன். "வருவான்" என்றான். "உடன் வரும் படை எத்தனை?" என்று கேட்டேன். "பரிவாரமாகப் பத்துப் பன்னிரண்டு புலி நாய்கள் வரும். படை வராது" என்றான். "என்னுடன் சிநேகப்படுத்தி வைப்பாயா?" என்று கேட்டேன். "செய்கிறேன்" என்றான். |