சக்திவேல்! வீரவர்ம ராஜனே, நானும் அந்தக் கரடிச் சாத்தானும் சூனியக் குகையில் வாய்ச் சண்டை கைச்சண்டையாகிப் பிறகு சமாதானப்பட்டு அன்றிரவு அங்கிருந்து வெளிப்பட்டுக் குடியன் கோயிலுக்கருகே கரடிச் சாத்தான் வளர்க்கும் ஹோமசாலைக்குத் திரும்பி வந்து, கொஞ்சம் நித்திரை செய்தோம். மறுநாள் பொழுது விடிந்தது. தண்டிராஜன் தனது சைனியத்துடன் நாகமலைப் பாகத்துக்கு வந்துவிட்டான். கரடிச் சாத்தானைத் தனது கூடாரத்துக்குத் தருவித்தான். இவனும் அவனும் சம்பாஷணை செய்து கொண்டிருக்கையிலே என்னை அழைப்பித்தார்கள். நான் அங்கே போகுமுன்பு ரணகுமாரனிடம் சொல்ல வேண்டிய விஷயங்களைச் சொல்லித் திடப்படுத்தி விட்டுத் தண்டிராஜன் முன்னே சென்றேன். கரடிச் சாத்தானிடம் ஒரு மோதிரத்தைக் காண்பித்தேன். அவன் தனக்கு தாகவிடாய் தீர்த்துவர வேண்டுமென்று முகாந்திரம் சொல்லி வெளியே போனான். நானும் தண்டிராஜனும் தனியே இருந்தோம். நமஸ்காரம் பண்ணினேன். "யார் நீ?" என்று கேட்டான். "விகாரனுடைய குமாரன், என் பெயர் உபாய வஜ்ரன். விகார மாமா சொன்னார். அவர் உத்திரவின்படி இங்கு வந்தேன்." "நாகமலையில் காசுக்குகையில், தங்கக்காசு மகரிஷி என்ற சித்தர் இருக்கிறார். அவர் கல்லைப் பொன்னாக்குவார். அவரிடத்தில் பொன் வாங்கிக்கொண்டு போக வீரவர்மன் வருவான். மேல்படி தங்கக் காசு மகரிஷியை விகார மாமா நம்முடைய கக்ஷிக்கு அனுகூலம் ஆகச் செய்து விட்டார். அவர் வீரவர்மனை மதுவிலே மயக்கி வைப்பார். அவன் களியுண்டிருப்பான். அந்த க்ஷணத்தில் நாம் அங்கே யிருக்க வேண்டும். வீரவர்மனைப் பிடித்துக் கட்டி வந்து விடலாம். இதுவெல்லாம் விகார மாமா சொல்லிக் கொடுத்த ஏற்பாடுகள், சொன்னேன்." அவன் நம்பவில்லை. யாரையெல்லாமோ கலந்து பேசினான். கரடிச் சாத்தானைக் கலந்து வார்த்தை சொன்னான். பிறகு மாலையில் என்னை மறுபடி அழைப்பித்து உன்னிடம் எனக்கு நம்பிக்கை பிறக்கவில்லை என்று சொன்னான். நான் அவர்கள் குலத்து மூலமந்திரத்தை உச்சரித்தேன். உடனே பகவான் கிருஷ்ணனை ஸ்மரித்து அந்தப் பாவத்தை நீக்கிக் கொண்டேன். நம்முடைய மகா சக்தி மந்திரத்தை அதன் பின் ஸ்மரித்தேன். அவனுக்கு நம்பிக்கை பிறந்து அவனுடன் ஐந்து பேரைச் சேர்த்துக் கொண்டு காசுக் குகைக்கு வந்தான். அங்கு ரணகுமாரன் ஒருவனே ஐந்து பேரையும் அடித்துத் துரத்திவிட்டு தண்டிராஜனையும் குண்டுக் கட்டாகக் கட்டிப் பிடித்துக்கொண்டு வந்தான்" என்றது. |