பக்கம் எண் :

உபாயவஜ்ரன் என்ற நரியின் திறமைகள்

"இங்ஙனம் உபாயவஜ்ரன் என்ற நரியின் வார்த்தையைக் கேட்டு மிகவும் மெச்சிச் சிங்கம் தனது சபையைக் கலைத்து விட்டது. பிறகு சிறிது காலத்துக்கப்பால் மறுபடி சண்டை தொடங்கிற்று" என்று விவேக சாஸ்திரி தன் மக்களிடம் சொல்லி வரும்போது, "தண்டிராஜனைப் பிடித்துக் கைதியாக்கின பிறகு சண்டை எப்படி நடக்கும்?" என்று அவருடைய மூன்றாவது குமாரனாகிய ஆஞ்சனேயன் கேட்டான்.

அப்போது விவேக சாஸ்திரி சொல்லுகிறார்:-

தண்டி பிடிபட்டான் என்ற செய்தி தெரிந்த உடனே பேய்க் காட்டில் ராஜ்யப் புரட்சி உண்டாகிக் குடியரசு நாட்டுக்குக் கரடிச் சாத்தானைத் தலைவனாக நியமித்தார்கள். சகோதரத்வம், சமத்வம், சுதந்திரம் என்ற மூன்றையும் தந்திரமாகக் கரடிச்சாத்தான் ஊர்தோறும் பறையறைவித்தான். இந்தச் செய்தி தெரிந்த வீரவர்மன் தனது படையை அனுப்பிக் கரடிச் சாத்தானைப் பிடித்து வரும்படி செய்தான். கரடியின் வாலை யறுத்து வேறொரு காட்டுக்குத் துரத்திவிட்டான். தண்டியின் தம்பியாகிய உத்தண்டியைக் குடியரசின் தலைவனாக நியமனம் செய்தான். தண்டியைப் பொன்னங்காட்டுக் கோட்டையிலே கைதியாக வைத்துக் கொண்டான். பொன்னங்காட்டில் ஒரு நரிக் கூனி உண்டு. அவள் பெயர் நரிச்சி நல்ல தங்கை. அந்த நரிச்சி நல்லதங்கையானவள் வீரவர்மன் சிறு குழந்தையாக இருந்த காலத்தில் அரண்மனையில் ஏவல் செய்து கொண்டிருந்தாள். அப்போது ஒரு நாள் வீரவர்மன் விளையாட்டாகக் கல் வீசிக்கொண்டு இருக்கையிலே, ஒரு கல் நரிச்சி நல்லதங்கையினுடைய முதுகில் வந்து விழுந்து விட்டது. நல்ல தங்கையின் முதுகு அதுமுதல் ஒடிந்துபோய் அவளுக்குக் கூனிச்சி நல்லதங்கை என்ற பெயர் உண்டாயிற்று. ஆஹா! இப்படி இவளை முதுகை ஒடித்து அலங்கோலமாகச் செய்தோமே என்ற பச்சாதாபத்தால் வீரவர்மன் அவளிடம் மிதமிஞ்சின தயை செலுத்தினான். 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்.' அவள் எவ்விதமான குற்றங்கள் செய்த போதிலும், நீதிப்படி தண்டிக்காமல் அரைத் தண்டனை, கால் தண்டனையாக விட்டு வந்தான். அவள் இவனை க்ஷமிக்கவேயில்லை. இவனுக்குத் தீங்கு செய்வதையே விரதமாகக் கொண்டு வந்தாள். அவள் பெரிய தந்திரி. வீரவர்மனுக்குக் கெடுதி சூழ்ந்து கொண்டே காலத்தைக் கருதிக் காத்துக்கொண்டிருந்தாள். காலமும் அனுகூலமாக வாய்ந்தது. பேய்க்காட்டு நாயகனாகிய உத்தண்டி தனது தமையன் ஸ்தானத்தில் தானே அரசனென்று சொல்லி வீரவர்மன் மீது போர் தொடுத்தான். ராஜ்யத்தை இத்தனை சுலபமாக இழந்த தண்டி மூடனைக் குடிகள் வெறுத்து உத்தண்டியை அரசனாகக் கொண்டு பேய்க்காட்டை அவமதிப்புக் கிடமாகச் செய்த வீரவர்மனையும் தண்டிக்கும் பொருட்டு உத்தண்டி தொடுத்த போரில் மிகவும் மகிழ்ச்சி கொண்டாடினர். இத்தருணத்தில் கூனிச்சி நல்லதங்கை ரகஸ்யமாக விகாரனிடத்திலும், தண்டிராஜனிடத்திலும் கலந்து தனித்தனியாக சம்பாஷணைகள் செய்து கொண்டு, பொன்னங் காட்டுக் கோட்டை, கொத்தளம், படை பரிவாரங்களைக் குறித்துத் தனக்குத் தெரிந்த ரகஸ்யங்களைச் சொல்லி உத்தண்டிக்கு உதவி செய்யும் பொருட்டாகப் பேய்க்காட்டுக்குச் சென்றாள். இங்ஙனம் விவேக சாஸ்திரி தம்முடைய மக்களுக்குக் கதை சொல்லி வருகையிலே ஆஞ்சனேயன் கேட்கிறான்:-