பக்கம் எண் :

உபாயவஜ்ரன் என்ற நரியின் திறமைகள்

"பக்திமான் பிழைகளும் செய்வானோ?"

விவேக:- "மனதறிந்து செய்யமாட்டான். கர்ம வசத்தால் பிழைகள் ஏற்படலாம்."

ஆஞ்ச:- "கர்மம் பக்தியை மீறிச் செல்லுமோ?"

"விவேக:- "பக்தி பரிபூரணமான பக்குவம் பெறும் வரையில், கர்மத் தொடர் மனிதனை விடாது. பழஞ்செய்கை பயன் விளைவிப்பதை அழிக்க வேண்டுமானால், பக்தியாகிய கனல் அறிவாகிய வேதிகையிலே புகையில்லாதபடி எரிய வேண்டும். அந்த நிலைமையை வீரவர்மன் பெறவில்லை."

ஆஞ்ச:- "கூனியினுடைய மனம் வீரவர்மனைக் கண்டு ஏன் இளகவில்லை?"

"சாக்ஷாத் பகவான் ராமாவதாரம் செய்து பூமியில் விளங்கினான். அந்தக் கூனி மனம் அவனிடம் அன்புறவில்லை; மகிமையைக் கண்ட மாத்திரையில் எல்லாருடைய நெஞ்சும் வசமாய் விட்டது. சூரியனைக் கண்டவுடன் குருவிகள் பாடிக்கொண்டு வெளியே பறக்கும்; ஆந்தைகள் இருட்டுக்குள்ளே நுழையும், எல்லா மனிதரையும் வசப்படுத்தக்கூடிய தெய்வ பக்தி இதுவரை மனுஷ்ய ஜாதியில் காணப்படவில்லை. இனி மேல் தோன்றக் கூடும்" என்று விவேக சாஸ்திரி சொன்னார்.

விவேக சாஸ்திரி சொல்லுகிறார்:

"கேளீர், மக்களே, முன்பு நரிச்சி நல்லதங்கை என்பவள் வீரவர்மனிடம் இருந்து ஓடிப்போய்ப் பேய்க்காட்டில் உத்தண்டி ராஜனைச் சரண் புகுந்தாள். அவனிடம் அந்த நரிச்சி பொன்னங்காட்டு ராஜ்யத்தின் சேனாபலம், மந்திரி பலம், பொருள் வலி முதலிய ரகஸ்யங்களை யெல்லாம் தெரிவித்தாள். அப்போது இரண்டு ராஜ்யங்களுக்கும் யுத்தம் தொடங்கி விட்டது. அந்த யுத்தத்தில் வீரவர்மன் பக்கத்தில் இருந்த சைந்யங்கள் பின்வருமாறு:-