பக்கம் எண் :

உபாயவஜ்ரன் என்ற நரியின் திறமைகள்

புலிப்படை ஆயிரம், கரடிப்படை ஆயிரம், ஓநாய் ஆயிரம், யானை ஆயிரம், ஒட்டகை ஆயிரம், சுமை தூக்குகிற கழுதை பதினாயிரம், உளவு பார்க்கிற காக்கை இரண்டாயிரம், மேலும் பாம்புப்படை பதினாயிரம், கழுகுப்படை மூவாயிரம், பருந்துப் படை பதினாயிரம்.

எதிர்ப்பக்கத்தில் (உத்தண்டி பக்கத்தில்) இந்த சைனியத்திலே எட்டிலொரு பங்குகூடக் கிடையாது.

எனவே முதல் இரண்டு ஸ்தலங்களில் உத்தண்டியின் படைகள் முறியடிக்கப்பட்டன. உத்தண்டி மிகவும் விசனத்துடன் தனது மாளிகையில் உட்கார்ந்து யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறான். அப்போது நரிச்சி நல்லதங்கையை அழைத்து யோசனை கேட்போம் என்ற எண்ணங்கொண்டவனாய் அவளைக் கூட்டிவரச் செய்தான். அவ்விருவரும் சம்பாஷணை செய்கிறார்கள்.

உத்தண்டி சொல்லுகிறான்: - "நீ உளவுகள் சொல்லியும், நமது சேனாபதி திறமை யில்லாமையால் இரண்டு ஸ்தலங்களில் வந்து படைகள் தோற்று விட்டன. என்ன செய்வோமென்பது தெரியவில்லை. நான் உன்னையே நம்பியிருக்கிறேன். என்னுடைய சைந்யம் வீரவர்மனுடைய சைந்யத்தில் எட்டில் ஒரு பங்குகூட இல்லையென்பது தெரிந்தும் உன்னுடைய வலிமையையும் நம்பி நான் இந்தப் போரில் மூண்டேன். இத்தருணத்தில் நாம் வெற்றி பெறுவதற்கான வழிகள் நீதான் சொல்லவேண்டும்" என்றான். அப்போது நரிச்சி நல்லதங்கை சொல்லுகிறாள்: - "ராஜாதி ராஜனே, உத்தண்டி பூபாலனே, சத்ரு சிங்க மண்டல விநாசக ஜய கண்டனே, கேளாய்; நானோ ஸ்திரீ. அதிலும் தங்களைப் போன்ற சிங்கக் குலமில்லை.நரிக் குலம். முதுகு புண்பட்டவளாய்த் தங்களிடம் சரணமென்று வந்தேன். எனக்குத் தெரிந்தவரை பொன்னங்காட்டு சைந்யம் படை முதலிய உளவுகளெல்லாம் சொன்னேன். தங்களுடைய சைந்யம் அளவில் சிறிதாக இருந்தபோதிலும் தந்திரத்தால் வீரவர்மனுடைய படைகளை வென்று விடலாமென்று தாங்களும் தங்களுடைய முக்கிய மந்திரி, பிரதானிகளும் சேனாபதிகளும் இருந்து யோசனை செய்து முடித்தீர்கள். இப்போது என்னிடம் யோசனை கேட்கிறீர்கள்! நான் எப்படிச் சொல்வேன்? மேலும், ஒரு வேளை நான் யுக்தி சொல்லி அதனால் நீங்கள் ஜயிப்பதாக வைத்துக் கொண்ட போதிலும், பிறகு என்ன கைம்மாறு தருவீர்கள்? அதைச் சொன்னால் நான் எனக்குத் தெரிந்தவரை யோசனை சொல்லுகிறேன். ஜயத்துக்கு நான் பொறுப்பில்லை. ஒரு வேளை நான் சொல்லும் யோசனையால் வெற்றி கை கூடினால் எனக்கு நீர் என்ன பிரதியுபகாரம் செய்வீர்? அதைத் தெரிவித்தால், பிறகு நான் என்னால் கூடிய யோசனை சொல்லுகிறேன்" என்றது. அப்போது உத்தண்டி சொல்லுகிறது:-