பக்கம் எண் :

உபாயவஜ்ரன் என்ற நரியின் திறமைகள்

"நீ எது கேட்டாலும் கொடுப்பேன்" என்றது.

அப்போது நரிச்சி நல்லதங்கை:-

"ஹே, உத்தண்டி ராஜனே, நான் சொல்லும் யோசனையால், உனக்கு வெற்றி கிடைத்தால், நீ என்னை மணம் செய்து கொண்டு உன்னுடைய பட்டது ராணியாக்குவாயா?" என்று கேட்டது. இதுகேட்டு உத்தண்டி கோபத்துடன், "சீச்சீ மூட நரியே, நீ வீட்டில் ஏவல் தொழில் செய்தவள். கூனிச்சி, கிழவி. நாமோ ராஜகுலம். நல்ல யௌவன தசையில் இருக்கிறோம். நம்முடைய அந்தப்புரத்தில் இருக்கும் சிங்கச்சியோ கடம்ப வனத்து ராஜனாகிய மகாகீர்த்தியுடைய குண்டோதரன் மகள் காமாக்ஷியென்று பூமண்டலமெங்கும் கீர்த்தி வாய்ந்தவள். அவளைப்போல் அழகும் கல்வியுமுடைய பெண் சிங்கச் சாதியில் எங்குமே கிடையாது. இதையெல்லாம் உணர்ந்தவளாகிய நீ என்னிடம் என்ன மூடவார்த்தை சொன்னாய்? உளறாதே. நீ பெண்ணாகையால் விட்டேன். ஆணாக இருந்து இப்படி வார்த்தை சொன்னால் இதற்குள் தலையை வெட்டிப் போட்டிருப்பேன்" என்று சொல்லிக் கர்ஜனை புரிந்தது.

அப்போது நரிச்சி நல்லதங்கை சொல்லுகிறாள்:-

"கேளாய் உத்தண்டி ராஜனே, எனக்கு உன்னை மணம் செய்து கொள்ள வேண்டுமென்ற உட்கருத்து கிடையாது. சும்மா, உன்னைச் சோதனை போடுவதற்காகப் பேசிய வார்த்தையே யன்றி வேறொன்றுமில்லை. சிங்கச் சாதிப் பெண்களுக்குள்ளே அழகில் மாத்திரமேயல்லாது கல்வியிலும் சிறந்தவளாகிய காமாட்சி தேவி (சிங்க ராணி)யை மனையாளாகக் கொண்ட நீ இப்படிப்பட்ட ஆபத்து நேரத்தில் அவளிடம் யோசனை கேட்காமல், கேவலம் ஒரு கிழ நரிச்சியிடம் கேட்க வந்தாயே, அது பிழை என்பதை உனக்குத் தெரிவிக்கும் பொருட்டாக அந்த வார்த்தை சொன்னேன். மணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனை எனக்குக் கனவிலே கூடக் கிடையாது. உன்னைக் கேலிபண்ணி உன்னுடைய ராணி காமாட்சியை நீ இந்த யுத்த பயத்தினால் மறந்திருக்கும் செய்தியை நினைப்பு மூட்டி உன்னை அவளிடம் யோசனை கேட்கும்படி தூண்டிவிடும் பொருட்டாக அந்த வார்த்தை சொன்னேனேறொயல்லாது வேன்றுமில்லை. ஆனாலும் உன் வார்த்தைகளில் இருந்த சில அசம்பாவிதங்களை நீக்க விரும்புகிறேன். நரி ஜாதி ஸ்திரீயை சிங்க ஜாதி புருஷன் மணம் செய்வது கூடாதென்றா சொல்லுகிறாய்? ரிஷி மூலம், நதி மூலம் விசாரணை செய்யக் கூடாதென்று கேள்விப்பட்டிருக்கிறாயா? மேற்குல ரிஷிகள் கீழ்க்குல ஸ்திரீகளை மணந்து பல ரிஷி வம்சங்கள் மங்கியிருக்கின்றன.