பகவான் ஸ்ரீமந் நாராயணன், அகண்டாதீதன், சூக்ஷ்மாத்மா, புருஷோத்தமன், உலகத்துக்கு மூதாதை. அவனே ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டர் மகளையும், டில்லி பாதுஷா மகளையும் மணஞ் செய்து கொண்டு ஸ்ரீரங்கத்தில் துயில்கிறான். ஹே, உத்தண்டி ராஜனே, ஜாதி பேதமா கற்பிக்கிறாய்? சிங்கம் மேல் ஜாதியென்றும், நரி கீழ் ஜாதியென்றும் நீ நினைக்கிறாயா? அப்படித்தான் அந்த மூடனாகிய வீரவர்மன் நினைத்தான். அது நிற்க. "ஹே, உத்தண்டி ராஜனே, வயதில் மூத்த பெண்ணை இளைய பிள்ளை மணம் செய்து கொள்ளத் தகாதென்று சொன்னாய்! அது மகா மூடத்தனமான வார்த்தை! புதிதாக வருகிற ஒவ்வொரு இந்திரனுக்கும் ஆதிமுதல் பழைய இந்திராணிதான் மாறாமல் இருந்து வருகிறாள். கூனிச்சி என்று சொல்லி என்னை நகைத்தாய். உடம்புக்கா பிரேமை செய்கிறோம். அரசனே, உயிருக்கு அன்பு செலுத்துகிறோம். இதுவெல்லாம் நீ அறியாத விஷயம். இது நிற்க. "உத்தண்டி ராஜனே, இவ்வளவுக்கு மேலும் உனக்கு வெற்றி பெற உபாயங் கற்றுக் கொடுத்தால் நீ எனக்கு வேறே என்ன கைம்மாறு தருவாய்?" என்று கேட்டது. அப்போது உத்தண்டி ராஜன் சொல்லுகிறது:- "நீ விவாகத்தைத் தவிர வேறென்ன தானம் கேட்டபோதிலும் கொடுப்பேன்" என்றது. அதற்கு நரிச்சி நல்லதங்கை சொல்லுகிறது - "நீ முதல் தடவையும் இப்படித்தான் எது கேட்டாலும் கொடுப்பேன்" என்றாய். பிறகு வாக்குத் தவறினாய். நீ மறுபடியும் வாக்குத் தவறலாம் என்ற சந்தேகம் எனக்கு ஜனிக்கிறது" என்றது. அப்போது உத்தண்டி "பயப்படாதே! வேறென்ன கேட்டாலும் தருகிறேன்," என்றது. |