பக்கம் எண் :

உபாயவஜ்ரன் என்ற நரியின் திறமைகள்

"உன்னுடைய ராஜ்யத்தில் பாதி கொடுப்பாயா?" என்று நரிச்சி நல்லதங்கை கேட்டாள். உத்தண்டியும் இதைக் கேட்டு மனவருத்தமடைந்தான். ராஜ்யத்தில் பாதி கொடுக்க அவனுக்குப் பெரும்பாலும் சம்மதமில்லை. ஆனாலும் என்ன செய்யலாம்? தனது சேனாபதிபதிகள் இனியேனும் போரில் வெல்வார்களென்ற நம்பிக்கை அவனுக்குக் கிடையாது. எப்படியேனும் நரிச்சி நல்லதங்கை ஒரு வழி கண்டுபிடித்துச் சொல்வாளென்றும் அதனால் தனக்கு வெற்றியேற்படலாமென்றும், அவனுக்கு நம்பிக்கையிருந்தது. மேலும் இரண்டாம் முறை வாக்குத் தவற வெட்கப்பட்டான். ஆதலால் அவளிடம் "நீ சொல்லுகிற உபாயத்தை அனுசரித்து அதனால் எனக்கு வெற்றி கிடைத்தால் உனக்குக் கட்டாயம் என் ராஜ்யத்தில் பாதி தருவே"னென்று வாக்குக் கொடுத்தான்.

அப்போது நரிச்சி சொல்லுகிறாள்:-

"கொலம்பஸ் கோழி முட்டையை உடைத்துக் காட்டின மாதிரி வந்து சேரும்" என்றாள்.

"அதென்ன வர்த்தமானம்?" என்று உத்தண்டி என்ற சிங்கராஜன் கர்ஜனை செய்தது.

நல்லதங்கை சொல்லுகிறாள்:

"ஒரு கோழி முட்டையை - அடபோ, கொலம்பஸ் என்கிற பூகோளப் பேர்வழியும் அவனோடு சுமார் முப்பத்தேழு சிநேகிதர்களும் ஒரு நாள் போஜனம் செய்து கொண்டிருந்தார்களாம். அப்போது கொலம்பஸ் கேட்டான்: - "இங்கே யாராவது ஒரு கோழி முட்டையை மேஜையின் மேல் யாதொரு ஆதாரமுமில்லாமல், அசைவில்லாமல் நட்டமாக நிறுத்தி வைக்கக் கூடுமா? நான் செய்வேன். வேறு யார் செய்வார்?" என்றான். அப்போது கொலம்பஸ் உடன் இருந்த நண்பர் பலவிதங்களில் முயற்சி பண்ணியும் கோழி முட்டையை மேஜை மேல் ஆதாரமில்லாமல் நட்டமாக நிறுத்தச் சாத்தியப்படவில்லை.