பக்கம் எண் :

உபாயவஜ்ரன் என்ற நரியின் திறமைகள்

கடைசியாக அவர்களெல்லாம் தோல்வியை ஒப்புக்கொண்டார்கள். அப்போது கொலம்பஸ் எழுந்து நின்றான். கோழி முட்டையைக் கையில் எடுத்தான். ஒரு ஓரத்தைச் சீவிவிட்டு, மேஜைமேல் நட்டமாக நிறுத்திவிட்டான். நண்பர்களிலே பலர் அவனுடைய சமத்காரத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள். ஆனால் சில மூடர்கள் மாத்திரம் 'ஓகோ இதென்ன ஏமாற்றுகிற மாதிரி. கோழி முட்டையில் ஓரத்தைத் துளிகூட உடைக்காமல் நிறுத்தவேண்டுமாக்கும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். உடைத்து நிறுத்தலாம் என்று முதலிலேயே சொல்லியிருந்தால் நாங்கள் அப்போதே செய்திருக்கமாட்டோமா?' என்று சொல்லி முணுமுணுத்தார்களாம்" என்று நரிச்சி சொன்னாள். "இவ்வளவுதானா?" என்று உத்தண்டி கேட்டான். "ஆமாம், இவ்வளவுதான்" என்று நரிச்சி சொன்னாள். அப்போது உத்தண்டி சொல்லுகிறான்:- "அப்படியானால் கொலம்பஸ் சுத்த அயோக்யன்! அவனுடைய கெட்டிக்காரத்தனத்தைப் பார்த்து ஆச்சர்யப் பட்ட சிநேகிதர்கள் பரம மூடர்கள்" என்றான். அதற்கு நரிச்சி நல்லதங்கை சொல்லுகிறாள்:

"அந்த மாதிரிதான் எனக்கும் சொல்லிப் பாதி ராஜ்யம் கொடுப்பதாக வாக்களித்ததை அழித்துப் போடுவாயோ?" என்றாள்.

உத்தண்டி ராஜன்:- "மாட்டேன்! நீ யோசனை சொல்லு. அது எத்தனை சாமான்யமாகப் பின்பு புலப்பட்ட போதிலும் அதனால் வெற்றி கிடைப்பது மெய்யானால் உன்னிடம் நன்றி மறக்காமல் உனக்குப் பாதி ராஜ்யம் கொடுத்து விடுவேன்" என்றது.

அப்போது நரிச்சி நல்லதங்கை சொல்லுகிறாள்:-

"உத்தண்டி மகாராஜனே, தங்களுடைய மாமனார் குண்டோதர ராஜனுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுங்கள். அதில் வேறொன்றும் எழுதக்கூடாது. ஆபத்து சமயம். சைந்யம் வேண்டும். நரிச்சி நல்லதங்கையை நம்பு என்று மூன்று வரி மாத்திரம் எழுதினால் போதும். இப்போதே எழுதிக்கொடு. நான் அப்பால் சைந்யம் கொண்டு வந்து வீரவர்மனுடைய மமதையையும், அகங்காரத்தையும் தொலைக்கிறேன். உன் பெயரை, சிங்க சரித்திரத்தில் எக்காலத்திலும் அழியாமல் நிறுத்தி வைக்கிறேன்" என்றாள்.