"நாலு சாஸ்திரம் படிக்கப்போன பிராமணப் பிள்ளையின் கதை தெரியுமா?" என்று சிங்கச்சி காமாக்ஷி கேட்டாள். "நான் ஆபத்தான நிலைமையில் இருக்கும்போது நீ கதை சொல்ல வருகிறாயா! அதென்ன?" என்று உத்தண்டி கர்ஜனை புரிந்தான். "வீரவர்மன் தன்னுடைய பத்தினியிடத்தில் தேவதா விசுவாசம் வைத்திருப்பதாகவும் அவளை எப்போதும் சிடுசிடுப்பதே கிடையாதென்றும், தனது பிரதான ராஜ்யகாரியங்களில் எதையும் தனது பத்தினியாகிய மாகாளியிடம் கேட்காமல் செய்வதில்லையென்றும், முன் அந்த சமஸ்தானத்திலிருந்து வந்த கரடி ஸந்நியாசி ஒருவர் சொன்னாரே; ஞாபகமிருக்கிறதா?" என்று காமாக்ஷி கேட்டாள். "நான் சங்கடக் குழியில் விழுந்து வெளியேற வழி யறியாமல் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கையில் நீ சத்துருவின் புகழ்ச்சியை என் செவியில் பேசுகிறாயே உனக்குத் தகுமா?" என்று உத்தண்டி வினவினான். "ஸ்திரீகளை அவமரியாதை பண்ணுவோர் மனிதரில் மிருகங்கள் என்று சண்டி நீதி சொல்லுகிறதே, அது ஞாபக முண்டா?" என்று காமாக்ஷி கேட்டாள். "நான் இப்போது எவ்விதமாகவும் அவமதிப்புச் செய்யவில்லை" என்றான் உத்தண்டி. "என்னிடம் ஒரு வார்த்தைக்கூடக் கேளாமல் நீ என்பிதாவுக்கு சைந்யம் வேண்டுமென்ற பிரார்த்தனை அனுப்பினாயே! அது என்னை அவமதித்ததாக மாட்டாதா?" என்றாள் காமாக்ஷி. |