பக்கம் எண் :

உபாயவஜ்ரன் என்ற நரியின் திறமைகள்

"அது போனால் போகிறது. இனிமேல் நடக்க வேண்டிய காரியத்தைப் பேசுவோம்" என்று உத்தண்டி சொன்னான்.

"மேல் நடக்க வேண்டிய காரியம் யாதோ?" என்று சிங்கச்சி கேட்டது.

அப்போது உத்தண்டி சொல்லுகிறான்:- "மேல் நடக்க வேண்டியது யுத்தம். மேல் நடக்க வேண்டியது, ஜயம்!"

"போர் எந்த இடங்களில் தோற்றது? போர் தோற்ற சேனாபதிகளின் பெயர் என்ன?" என்று சிங்கச்சி கேட்டது. "நாகமலையிலே தோற்றோம். வெள்ளை வாய்க்கால் கரையிலே தோற்றோம். நாகமலையில் தோற்ற சேனாபதி கரடி வேலப்பன், வெள்ளை வாய்க்கால் கரையிலே தோற்றவன் புலி பொன்னம்பலம்" என்று உத்தண்டி சொன்னான்.

"அந்த வேலப்பனையும், பொன்னம்பலத்தையும் நாளை சூரியோதயமாய் ஒரு ஜாமத்துக்கு முன்பு சுட்டுக் கொன்று விடவேண்டும்." என்று சிங்கச்சி காமாக்ஷி சொன்னாள்.

உத்தண்டி:- "சாத்தியப்படாது" என்றான். அவள் "ஏன்?" என்றாள். அவன்:- "அவ்விருவரும் பெரிய வம்சத்துப் பிள்ளைகள். அவர்களுக்குத் தீங்கு செய்தால் தேசத்துப் பிரபுக்கள் நமக்கு விரோதமாகத் திரும்புவார்கள்" என்றான்.

அவள்; -" இப்போது இந்த தேசத்தில் உமக்கு அனுகூலமாக எத்தனை பிரபுக்கள் இருக்கிறார்கள்?" என்று கேட்டாள்.

அப்போது உத்தண்டி:- "என் நாட்டிலுள்ள பிரபுக்கள் அத்தனை பேரும் எனக்கு வேண்டியவர்களே. எதிர்க்கட்சி யாருமே கிடையாது!" என்றான்.