பக்கம் எண் :

உபாயவஜ்ரன் என்ற நரியின் திறமைகள்

"நாளைப் பொழுது விடிந்து ஒரு ஜாமத்துக்கு முன்பு வேலப்பனையும், பொன்னம்பலத்தையும் சுட்டுக் கொன்று விடவேண்டும். அது செய்தால், மேலே ஜயத்துக்குரிய உபாயங்கள் நான் சொல்லுகிறேன்" என்று காமாக்ஷி சொன்னாள்.

"நான் ஒரு போதும் அதற்கு இணங்க மாட்டேன்" என்றான் உத்தண்டி.

அப்போது உத்தண்டி என்ற சிங்க ராஜனிடம் பத்தினியாகிய சிங்கச்சி காமாக்ஷி சொல்லுகிறது:-

"ஸ்திரீகளை அவமதிப்புச் செய்வோன் ஆண்மக்களுக்குள்ளே முதல் வீரனாக விளங்க மாட்டான். பெண்ணைத் தாழ்வாக நினைப்பது அநாகரிக ஜாதியாருடைய முதல் லக்ஷணம். நீ என் வார்த்தையைத் தட்டுகிறாய்; உனக்குச் சண்டை ஜயிக்காது. நீ என்னை எப்போதும் அலட்சியம் பண்ணுகிறாய். எனது பிதா உனக்குத் துணைப்படைகள் என்னையறியாமல் அனுப்பும்படி செய்ய முடியுமென்று நினைத்தது உன் ஆலோசனைக் குறைவைக் காட்டுகிறது. உன்னை அழிய விடுவதில் எனக்குச் சம்மதமில்லை. நீயோ மதிக் குறைவினாலும், மூட மந்திரிகளின் உபதேசத்தாலும், மகா வீரனாகிய வீரவர்மனைப் பகைத்துக் கொண்டாய். என்னிடத்தில் மந்திராலோசனை கேட்கமாட்டாய்; நரிச்சி நல்லதங்கையிடம் கேட்பாய்! அந்தக் கூனற் கிழவிக்கு மாலையிடச் சம்மதப்படவில்லையே! நீ அந்த மட்டில் புத்திசாலிதான்! அவளுக்குப் பாதி யரசு கொடுப்பதாகச் சொல்லி விட்டாய்? உன்னுடைய புத்திக் கூர்மையை என்னவென்று சொல்வேன்?" என்றது. இது கேட்டு உத்தண்டி சொல்லுகிறான்:-

"ஆகா! நான் நரிச்சி நல்லதங்கையிடம் ரகஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்ததை உனக்கு யார் சொன்னார்கள்? உன்னுடைய தூண்டுதலின் மேலேதான் அவள் என்னிடம் அப்படிக் கேட்டாளோ?"

116