சிங்கச்சி காமாக்ஷி சொல்லுகிறாள்:- "கேளாய் ராஜனே, புருஷனுக்கு ஸ்திரீ உடம்பில் பாதி. நீ என்னை வெறுத்த போதிலும் எனக்கு உன்னைத் தவிர வேறு புகல் கிடையாது. நீ என்னிடம் வைத்திருந்த அன்பையெல்லாம் மறந்து விட்டாலும் என் நெஞ்சு உன்மீதுள்ள அன்பை மறக்கவில்லை. இன்னொரு சிங்கியென்றால் நீ செய்துவரும் அவகாரியத்துக்கு உன்னை முகங்கொண்டு பார்க்கமாட்டாள். நான் ஐயோ பாவமென்று உன்னை க்ஷமிக்கிறேன். ஆயினும், நான் இப்போது கதை சொல்ல ஆரம்பித்தால் நீ பொறுமையுடன் கேட்கமாட்டாய் என்ற சந்தேகம் எனக்கு உண்டாகிறபடியால் இப்போது சொல்ல வேண்டாமென்று யோசிக்கிறேன்" என்றாள். உத்தண்டி 'பொறுமையுடன் கேட்கிறேன்" என்று சத்தியம் பண்ணினான். பிறகு சிங்கச்சி பின் வரும் கதையை உரைக்கலாயிற்று: "ஓர் ஊரிலே ஒரு பிராமணப் பாட்டியிருந்தாள். அவளுக்கொரு பிள்ளையுண்டு. அந்தப் பிள்ளை வீட்டில் யாதொரு வேலையும் செய்யாமல் மூன்று வேளையும் தண்டச்சோறு தின்பதும் ஊர் சுற்றுவதுமாக இருந்தான். அந்தப் பாட்டி தோசை, இட்லி, முறுக்கு, கடலைச் சுண்டல் வியாபாரம் பண்ணி அதில் வரும் லாபத்தால், குடும்ப ஸம்ரக்ஷணை செய்து கொண்டிருந்தாள். அவன் நாளுக்கு நாள் அதிக சோம்பேறியாய் நேரத்தை நாசம் பண்ணிக் கொண்டிருந்தான். அப்போது பாட்டி ஒரு நாள் அவனைக் கூப்பிட்டு:-"அடா மகனே, ஒரு தொழிலும் செய்யாமல் சும்மா தின்று கொழுத்துக் கொண்டு எத்தனை நாள் இப்படி என் கழுத்தை அறுக்கலாமென்று யோசனை பண்ணுகிறாய்? நான் உயிரோடிருக்கும் வரை எப்படியாவது பாடுபட்டு உன் வயிற்றை நிரப்புவேன். எனக்குப் பிற்காலம் நீ எப்படி ஜீவிப்பாய்? நான் சாகு முன்னே உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்துவிட்டுச் சாகலாமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதற்காகத்தான் பக்கத்துத் தெருச் செட்டியாரிடம் மாசம் ஒரு ரூபாய் சீட்டுப் போட்டுக் கொண்டு வருகிறேன். நீ அந்தப் பெண்டாட்டியை எப்படி வைத்துக் காப்பாற்றுவாய்? சீ, நாயே, ஓடிப்போ, எங்கேனும் வடதேசத்துக்குப் போய் நாலு சாஸ்திரம் படித்துக் கொண்டுவா" என்றாள். |