அந்தப் பையனுக்கு சாஸ்திரம் என்றால் இன்ன பதார்த்தம் என்ற விஷயமே தெரியாது. ஆனாலும் அவன் மனதில் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற தாகம் இருந்தது. ஆதலால் பெண்டாட்டியைக் காப்பாற்ற சாஸ்திரம் படிக்க வேண்டுமென்று தாயார் சொல்லியதைக் கேட்டவுடன் அவனுக்குச் சாஸ்திரப் பயிற்சியில் விசேஷமான ஆவல் மூண்டது. அன்று பகல் சாப்பிட்டவுடனே தாயாரிடம் சொல்லிக் கொள்ளாமல் ஊரிலிருந்து புறப்பட்டு வடதிசை நோக்கிச் சென்றான். போகும் வழியிலே ஒரு பனைமரம் நின்றது. "எங்கே போகிறாய் அப்பா?" என்று இந்தப் பிள்ளையை நோக்கி அந்தப் பனைமரம் கேட்டது. "நான் சாஸ்திரம் படிக்கப் போகிறேன்" என்றான். அப்போது அந்தப் பனைமரம் சொல்லுகிறது:- "ஓ ஹோ ஹோ; சாஸ்திரமா படிக்கப் போகிறாய்? அப்படியானால் நான் ஒரு சாஸ்திரம் கற்றுக் கொடுக்கிறேன், தெரிந்துகொள்" என்றது. பிராமணப் பிள்ளை உடம்பட்டான். அப்போது பனைமரம் "நெட்டைப் பனைமரம் நிற்குமாம் போலே போலே" என்ற வாக்கியத்தைச் சொல்லிற்று. இந்த வாக்கியத்தைப் பையன் திரும்பத் திரும்பத் தன் மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டே போனான். அங்கே ஒரு பெருச்சாளி வந்தது. அந்தப் பெருச்சாளி இவனை நோக்கி, "அடா பார்ப்பாரப் பிள்ளாய், எங்கே போகிறாய்?" என்று கேட்டது. "சாஸ்திரம் படிக்கப் போகிறேன்" என்று இவன் சொன்னான். "அப்படியானால் நான் ஒரு சாஸ்திரம் சொல்லுகிறேன், படித்துக் கொள்" என்று பெருச்சாளி கூறிற்று. பையன் உடம்பட்டான். "பெருச்சாளி மண்ணைத் தோண்டுமாம் போலே போலே" என்ற சாஸ்திரத்தை அந்தப் பெருச்சாளி சொல்லிக் கொடுத்தது. இவன் மேற்படி இரண்டு சாஸ்திரங்களையும் வாயில் உருப் போட்டுக்கொண்டே நடந்து சென்றான். |