பக்கம் எண் :

இன்ப உலகம்

"இந்த உலகத்தில், பறக்கவேண்டுமென்ற நினைவுண்டானவுடனே, இந்த வெண்மை நிறங்கொண்ட வானிறகுகள் தோன்றுகின்றன. நீ பறக்க வேண்டுமென்று உள்ளத்திலே சங்கற்பஞ் செய்துகொள்."

"சரி"

"இப்போது என் கண்ணுக்குள்ளே உன் வடிவத்தைப் பார்."

பட்டப் பகற்போல் வீசிய நிலா வொளியிலே, அவளுடைய அழகிய கண்களுக்குள் உற்றுப் பார்த்தேன். அங்கே, எனது வடிவம் கந்தர்வ ரூபமாகத் தோன்றியது கண்டு வியப்படைந்தேன். ஆகா! நான் கனவுகளிலே என்னைக் கண்ட போது தோன்றிய வடிவம்! நோயற்றது; சுருங்கலற்றது; மண் தன்மையில்லாதது; சௌந்தரியமானது. எனக்கும் இரண்டு வான இறகுகள் திடீரென்று முளைத்திருக்கக் கண்டேன். எனது ரூபம் இத்தனை மாறுபாடு அடைந்திருப்பதைக் கண்டு களிப்புற்று உடனே அவள் முகத்தையும் பார்த்தேன். எனது கண்குறிப்பை நோக்கி என் மனதிடையே அப்போது நிகழ்ந்த எண்ணத்தை அவள் அறிந்துகொண்டு விட்டாள்.

"அடா! உன்னைக் கண்ணுக்குள் பார்க்கச் சொல்லிய தன்றோ பிழையாய்விட்டது" என்றாள்.

"ஏன்?" என்று கூறிச் சிரித்தேன்.

"இதுவரை நீ உன்னை மனித சரீர முடையவனாகவும், என்னைக் கந்தர்வ சரீர முடையவளாகவும் எண்ணி நடத்தி வந்தாய். இனி என்னை 'இணை' யென்று கருதி விடுவாய்."

"பிரியரூபிணி! நான் ஈசனாய் விட்டபோதிலும் உன்னைக் கண்டு வியப்படைவதை நீக்கமாட்டேன். எனினும், நான் உன்னை இணையாகக் கருதுவதில் உனக்கு சந்தோஷந்தானே?"