பக்கம் எண் :

இன்ப உலகம்

"ஓ"

பிறகு கண்களைக் கலந்தோம். 'கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனுமில.'

"பற" என்றாள்.

புதிதாக உள்ளத்திலே எழுந்த காதற் கிளர்ச்சி கொண்டோ, அல்லது இறகுகளின் உதவி கொண்டோ அல்லது காந்தத்தின் பின்னே செல்லும் ஊசியென அவள் பறந்து செல்வதை இயற்கை முறையாற் பின்பற்றியோ, அவளோடு நானும் பறந்து செல்வேனாயினேன். இறகுகளின் உதவிகொண்டு பறந்ததாக எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில், பறத்தல் அத்தனை சுலபமாகவும், சகஜமாகவும் தோன்றிற்று.

"எங்கே போகிறாய்? உனது மாளிகைக்கா?" என்று கேட்டேன்.

"என் வீடு, உன் வீடு என்ற பேதக் கதையெல்லாம் இங்கே கிடையாது. இது ஸ்வேச்சாலோகம்; முற்றிய ஞானத்திலே எவ்வாறு அபேதநிலை ஏற்படுகிறதோ, அது போல பரிபூர்ணமான போகத்திலேயும் அபேத நிலை தோன்றுகிறது. இங்கே எல்லோருக்கும் எல்லா மாளிகைகளும் உரிமைதான். யார் எங்கு வேண்டுமென்றாலும் யதேச்சையாக வாழலாம். நான் உன்னைக் கடலோரத்தில் சுகந்த மாளிகைக்கு அழைத்துப் போகிறேன்."

"அபேதம், பேதம் என்ற மிகப் பெரிய பேச்சுகள் பேசுகிறாயே? வேதாந்தம் எங்கே படித்தாய்?"