"போக நிலை நன்றாக உணர்ந்தவர்களுக்கு அத்வைத ஞானம் இயற்கையிலேயே உண்டாகும். போகமறியாதவர்கள் பேசும் அத்வைதம் பொய். உங்கள் மண்ணுலகத்திலே அந்த ஞான நடிப்பு மிகுதியாக உண்டு. எங்களுக்கு அபரோக்ஷ ஞானம் சுலபம். பரோக்ஷமும் எளிதுதான். இங்கிருந்து உபசாந்தி லோகம் வெகு சமீபம். போக மூர்த்தியாகிய விஷ்ணுவும், யோக நாதனாகிய சிவனும் ஒன்றே யென்பதை அறியாயா? இதெல்லாம் போகட்டும். இப்போது ஞானம் பேசத் தருணமன்று. கீழெல்லாம் பார்" என்றாள். நகரத்திலே இரண்டு பனை யுயரத்தில் பறந்து போய்க்கொண்டு கந்தர்வநாட்டு மாளிகைகள், சங்கீத சாலைகள், லீலா மண்டபங்கள் - என்பவற்றின் அற்புதங்களை யெல்லாம் நோக்கிச் சென்றேன். பறப்பதிலே உண்டான இன்பம் கொஞ்சமன்று. மண்ணுலகத்திலுள்ள சகல ஜந்துக்களிலும் பட்சிகளே அதிக சுகம் அனுபவிப்பதாகக் கருதவேண்டும். ஓடும் தண்ணீரிலே நீந்துவது சிறிது நேரம் இன்பமாயிருக்கும். ஆனால், வானத்தில் நீந்திச் செல்வது சதா இன்பம். அதிலும் பர்வதகுமாரியைப் போல் ஓர் வழித்துணை கிடைக்குமாயின், வாழ்நாள் முழுவதும் பறந்து கொண்டே யிருக்கலாம். ஐரோப்பியர்கள் கந்தர்வ போகங்களையே ஆதர்சமாகக் கொண்ட ஜாதியார். வான ரதங்கள் செய்து நடத்துகிறார்கள். ஆனால், அவர்களிடம் தமோகுணம் அதிகமாதலால், அந்தப் புதுமையை இன்ப வழிகளிலேயே விருத்தி செய்துகொண்டு போகத் தெரியவில்லை. வான ரதங்கள் ஏற்பட்டு இன்னும் சரியாக நடத்தத் தெரிவதற்கு முன்னாகவே, 'எதிர்காலத்துப் போர்கள் வானத்திலேயே நடக்கக் கூடுமல்லவா?' என்ற விஷயத்தைப் பற்றிப் பலவாறு ஆலோசனைகள் செய்யத் தலைப்பட்டு விட்டார்கள். அவர்களுக்கு ஞாபகமெல்லாம் யுத்தத்திலேயும், கொலையிலேயும் இருக்கிறபடியால், அவற்றை அனுசரிக்கத் தகுதியில்லாதவர்களாகிறார்கள். இது நிற்க. |