பக்கம் எண் :

இன்ப உலகம்

யக்ஷர் நாட்டிற்கு வந்த ஆரம்பத்திலே எனக்குப் பொறுக்க முடியாத மயக்கமும் திகைப்பும் விளைந்திருந்தன என்று மேலே கூறியிருக்கிறேன். அவை சிறிது சிறிதாக நீங்கி இன்பவுணர்ச்சி மட்டும் மிஞ்சி நின்றது. அறிவிலே தெளிவுண்டாயிற்று. காலையில் விழித்தெழுந்து, முகந்துடைத்துக் கடலருகே சென்று பார்ப்பவனது கண்ணுக்குப் புலப்படுவது போல, வானத்திலே பறந்து செல்லும் எனக்குக் கீழே யிருந்த விஷயங்களெல்லாம் மிகத் தெளிவோடு விளங்கலாயின. அப்பொழுது நான் கண்டுசென்ற செய்திகளையெல்லாம் விஸ்தரிக்க வேண்டுமானால் ஆயிரம் அத்தியாயங்கள் போதா. ஒரு சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.