பக்கம் எண் :

விசாலாக்ஷிக்குக் கிடத்த உதவி

"என்னைத் தக்க கணவனொருவனுக்கு வாழ்க்கைப்படுத்திக் கொடுக்க வேண்டும். என் கையில் ஒரு கொழும்புக் காசுகூடக் கிடையாது. ஆதலால், என் கணவன் பணமுடையவனில்லா விட்டாலும் நல்ல படிப்பும் மாசந்தோறும் கொஞ்சம் பொருள் சம்பாதிக்கும் திறமும் உடையவனாக இருக்க வேண்டும். இந்தக் குழந்தையும் என்னோடுதான் இருக்கும்" என்றாள்.

"இந்தக் குழந்தை ஏது?" என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.

"இது என் தமையனாரின் குழந்தை. வேளாண்குடி அக்ரஹாரம் முழுமையும் பூகம்பத்தில் அழிந்தபோது, நானும் இக்குழந்தையின் தாயும் மாத்திரம் மழைக்கும் காற்றுக்கும் அந்த பூகம்பத்துக்கும் இரையாகாமல் உயிர் தப்பினோம். பூகம்பமும் புயற் காற்றும் பெருமழையும் அடங்கிச் சிறிது நேரத்துக்கப்பால் இக் குழந்தை பிறந்தது. இதைப் பெறும் கடமை தீர்ந்தவுடன் தாயும் பரலோகம் போய்விட்டாள். சாகும்போது இதன் காவலை என்மீது சுமத்திக் கட்டளையிட்டாள்" என்று விசாலாக்ஷி சொன்னாள்.

"இந்த மூன்று வருஷங்களாக நீ ஆகாரத்துக்கு என்ன செய்கிறாய்?" என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் கேட்டார்.

"செம்புப் பிச்சை; உவாதான மெடுத்து வயிறு வளர்த்து இந்தக் குழந்தையையும் காப்பாற்றிக் கொண்டு வருகிறேன்" என்றாள்.

ஜீ. சுப்பிரமணிய அய்யர் உடனே தம்முடைய கைப்பெட்டியைத் திறந்து நூறு ரூபாய் நோட் ஒன்றை எடுத்து விசாலாக்ஷி கையில் கொடுத்தார். விசாலாக்ஷி அதனை எழுந்து நின்று வாங்கி, இரண்டு கண்களிலும் ஒற்றிக்கொண்டு, தன் புடவைத் தலைப்பில் முடித்து இடுப்பிலே சொருகிக் கொண்டாள்.