"சரி, அம்மா, நீ போய் வா" என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் சொன்னார். அப்போது விசாலாக்ஷி சொல்லுகிறாள்:- "ஐயா, நான் தங்களைப் பிதா ஸ்தானமாக பாவித்துத் தங்களிடம் பணம் வாங்க உடம்பட்டேன். எனிலும், நான் இங்கு வந்தது தங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு போவதற்கன்று என்பதைத் தாங்கள் மறக்கக் கூடாது; கணவனை வேண்டி உங்களிடம் வந்தேன்" என்றாள். அது கேட்டு, ஜீ. சுப்பிரமணிய அய்யர்:- "அந்தக் காரியம் என்னால் செய்து கொடுக்க முடியாது" என்றார். "தங்களைத் தவிர எனக்கு வேறு புகலுமில்லை" என்று விசாலாக்ஷி வற்புறுத்தினாள். "என்னால் சாத்தியமில்லையே! நான் என்ன செய்வேன்?" என்றார் அய்யர். "நீங்கள் தயவு வைத்தால் சாத்தியப்படும்" என்று விசாலாக்ஷி சொன்னாள். "உன்னிடம் நல்லெண்ணமில்லாமலா, நீ கேட்காமலே உனக்கு நூறு ரூபாய் கொடுத்தேன்?" என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் கேட்டார். "அவ்வளவு தயவு போதாது. இன்னும் அதிக தயவு செலுத்த வேண்டும்" என்று விசாலாக்ஷி மன்றாடினாள். |