பக்கம் எண் :

விசாலாக்ஷிக்குக் கிடத்த உதவி

ஜீ. சுப்பிரமணிய அய்யர் தலையைச் சொரிந்தார். சில க்ஷணங்களுக்கப்பால் விசாலாக்ஷியை நோக்கிச் சொல்லுகிறார்: - "ராஜமகேந்திரபுரத்தில் என்னுடைய சிநேகிதர் ஒருவர் இருக்கிறார். அவருடைய பெயர் வீரேச லிங்கம் பந்துலு. அவர் விதவைகளுக்கு விவாகம் செய்து வைப்பதில் மிகவும் சிரத்தையுடன் உழைத்து வருகிறார். உன் வசம் ஒரு கடிதம் எழுதிக் கொடுக்கிறேன். அதை அவரிடத்தில் கொண்டு கொடு. அவர் உனக்கு வேண்டிய சௌகரியம் செய்து கொடுப்பார்" என்றார்.

"சரி" என்றாள் விசாலாக்ஷி.

உடனே, ஜீ. சுப்பிரமணிய அய்யர் தம்முடைய மேஜையின் மேல் வைத்திருந்த மணியைக் குலுக்கினார். கீழேயிருந்து அவருடைய மகள் வந்து, "என்ன வேண்டுமப்பா?" என்று கேட்டாள்.

"அந்த வேலைக்காரப் பயல் இன்னும் வரவில்லையோ?" என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் உறுமினார்.

"அவன் பட்டணத்துக்கன்றோ போயிருக்கிறான், ஸ்மித்ஷாப்பிலே போய் மருந்து வாங்கிக் கொண்டுவர? இனி அவன் பன்னிரண்டு மணிக்கு மேலேதான் வருவான். உமக்கென்ன வேண்டும்?" என்றாள்.

"என்னுடைய மேஜை மேலே, பேனா மைக்கூடு வைத்திருக்கிறேன். மேஜை திறந்துதான் இருக்கிறது. அதற்குள்ளே வலப் பக்கத்து அறையில் கடிதமெழுதுந் தாளும் உறைகளும் கிடக்கின்றன. ஒரு தாளும் ஒரு உறையும் கொண்டுவா. மையொத்தும் தாளையும் எடுத்து வா. அடியில் வைத்தெழுத ஒரு தடிப் புஸ்தகம் கொண்டு வா" என்று ஜீ. சுப்பிரமணிய அய்யர் சொன்னார்.

அவர் வேண்டிய சாமான்களை யெல்லாம் மகள் கொண்டு வந்து கொடுத்தாள். ஜீ. சுப்பிரமணிய அய்யர் ஒரு கடிதமெழுதி உறைக்குள்ளே போட்டு, அதை மகளிடம் கொடுத்து "உறையைச் சரியாக ஒட்டிக் கொண்டுவா" என்றார். அவள் அதை ஒட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள். கொடுத்துவிட்டு, மகள் மறுபடி பேனாவையும் மைக்கூட்டையும் மையொத்தும் தாளையும் கொண்டு மேஜையில் வைத்துவிட்டுக் கீழே சென்றுவிட்டாள். ஜீ. சுப்பிரமணிய அய்யர் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டே விசாலாட்சியை நோக்கி, "உனக்குத் தெலுங்கு தெரியுமா?" என்று கேட்டார். "தெரியும்" என்றாள் விசாலாட்சி.