பக்கம் எண் :

விசாலாக்ஷிக்குக் கிடத்த உதவி

"எங்கே படித்தாய்?" என்று கேட்டார்.

"எங்களூரில் நானிருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் தெலுங்கப் பிராமணரொருவர் இருந்தார். நான் சிறு குழந்தைப் பிராய முதலாகவே அந்தக் குடும்பத்தாருடன் மிகவும் நெருக்கமாகப் பழகிக் கொண்டு வந்தபடியால் எனக்குத் தெலுங்கு பாஷை தெலுங்கர்களைப் போலவே பேச வரும்" என்றாள்.

"சரி. உனக்குக் கூடிய சீக்கிரத்தில் நல்ல மணமகனுடன் விவாகம் நடைபெறும். நீங்கள் தம்பதிகளிருவரும் நெடுங்காலம் இன்புற்று வாழக் கடவீர்" என்று சொல்லி, அய்யர் அவளிடம் காயிதத்தைக் கொடுத்தார்.

அவள் அக் கடிதத்தை வாங்கிக் கண்ணிலே ஒற்றிக் கொண்டு மடியில் வைத்துக் கட்டிக் கொண்டாள். பிறகு ஜீ. சுப்பிரமணிய அய்யரை நோக்கி சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணிவிட்டு, அவரிடம் விடை பெற்றுக் கொண்டு, குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றனள். அக் குழந்தையும் ஜீ. சுப்பிரமணிய அய்யரை நோக்கிப் புன்னகை செய்து கொண்டே போயிற்று.