"எனக்கு யாருமே இல்லை. அதாவது, என்னுடைய விவகாரங்களில் கவனம் செலுத்தி என்னைக் காப்பாற்றக் கூடிய பந்துக்கள் யாருமில்லை. அப்படியே சிலர் இருந்தபோதிலும், நான் இப்போது விவாகம் செய்து கொள்ளப் போவதினின்றும் அவர்கள் என்னை ஜாதிக்குப் புறம்பாகக் கருதி விடுவார்கள்" என்று விசாலாட்சி சொன்னாள். "உனக்கு என்னென்ன பாஷைகள் தெரியும்?" என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார். "எனக்குத் தமிழ் தெரியும். தெலுங்கு தெரியும். இரண்டு பாஷைகளும் நன்றாக எழுதவும் வாசிக்கவும் பேசவுந் தெரியும்" என்று விசாலாட்சி சொன்னாள். "இங்கிலீஷ் தெரியுமா?" என்று பந்துலு கேட்டார். "தெரியாது" என்றாள் விசாலாட்சி. "கொஞ்சங் கூட?" என்று கேட்டார். "கொஞ்சங் கூட தெரியாது" என்றாள். "சங்கீதம் தெரியுமா?" என்று பந்துலு கேட்டார். "எனக்கு நல்ல தொண்டை. என் பாட்டை மிகவும் நல்ல பாட்டென்று என் சுற்றத்தார் சொல்வார்கள்" என்று விசாலாட்சி சொன்னாள். "வீணை, பிடில், ஹார்மோனியம் - ஏதேனும் வாத்தியம் வாசிப்பாயா?" என்று பந்துலு கேட்டார். "ஒரு வாத்தியமும் நான் பழகவில்லை" என்றாள் விசாலாட்சி. "தாளந் தவறாமல் பாடுவாயா?" என்று பந்துலு கேட்டார். "தாளம் கொஞ்சங்கூடத் தவறமாட்டேன்" என்று விசாலாட்சி சொன்னாள். |