பக்கம் எண் :

விசாலாக்ஷியின் ஏமாற்றம்

அப்போது வீரேசலிங்கம் பந்துல்லு:- "அந்த விஷயம் உனக்குச் சொல்லத் தவறி விட்டேனா? இதோ சொல்லுகிறேன் கேள். இவளுக்குப் பத்தாம் வயதிலே அந்தப் புருஷன் இறந்து போனான். அவன் இறந்துபோய் இப்போது பதினைந்து வருஷங்களாயின" என்றார்.

"சரி; அப்படியானால் அந்தப் டிப்டி கலெக்டர் யாதோர் ஆக்ஷேபமின்றி இவளை மணம்புரிந்து கொள்வார். முதற் புருஷனுடன் கூடியனுபவிக்காமல் கன்னிப் பருவத்திலே தாலியறுத்த பெண் தமக்கு வேண்டுமென்று அவர் சொன்னாரன்றோ?" என்று கிழவி கேட்டாள்.

"ஆம்; இவள்தான் அவர் விரும்பிய லக்ஷணங்களெல்லாம் பொருந்தியவளாக இருக்கிறாள். இவளை அவர் அவசியம் மணம் புரிந்து கொள்ள விரும்புவார். நீ சொல்லுமுன்பே, நான் இந்தக் கடிதத்தை வாசித்துப் பார்த்த மாத்திரத்தில், மேற்படி டிப்டி கலெக்டர் கோபாலய்யங்காரை நினைத்தேன், ஆனால் 'இந்தப் பெண் அவரை மணம் புரிந்து கொள்ள உடன்படுவாளோ' என்பதுதான் சந்தேகம்" என்று பந்துலு சொன்னார்.

இதைக் கேட்டவுடனே கிழவி:- "ஏன்? அவரிடத்தில் என்ன குற்றங் கண்டீர்? எலுமிச்சம் பழம்போலே நிறம்; ராஜபார்வை; பருத்த புஜங்கள்; அகன்ற மார்பு; ஒரு மயிர் கூட நரையில்லை; நல்ல வாலிபப் பருவம். டிப்டி கலெக்டர் உத்தியோகம் பண்ணுகிறார். எத்தனை கோடி தவம் பண்ணியோ, இவளுக்கு அப்படிப்பட்ட புருஷன் கிடைக்க வேண்டும்" என்றாள்.