சென்ற அத்தியாயத்தின் இறுதியில் சொல்லியிருக்கிறேன். அங்ஙனம் நோக்கிய இருவர் கோபாலய்யங்காரும் பந்துலுவும், காதல் கொண்டவர் கோபாலய்யங்கார். அந்த வேலைக்காரிக்கு இருபது வயதிருக்கும். மிகவும் அழகுடைய பெண். விசாலாட்சியின் அழகு. அறிவும் பயிற்சியும் கலந்த அழகு. பணிப் பெண்ணுடைய அழகு கிராமியமானது. எனிலும், இப்போது விசாலாட்சியை நோக்குமிடத்தே கோபாலய்யங்காருக்கு இவள் அதிக அழகா, அவள் அதிக அழகா என்ற சமுசய மேற்பட்டது. கண்களை மூடிக்கொண்டு மனவிழியாய் பணிப் பெண்ணுடைய வடிவத்தை நோக்குவார். பிறகு கண்ணை விழித்து எதிரே நிற்கும் விசாலாட்சியின் முகத்தைப் பார்ப்பார். இப்படி இரண்டு மூன்று தரம் கண்ணைமூடி மூடி விழித்துச் சோதனை செய்து பார்த்ததில் அவருடைய புத்திக்கு இன்னார்தான் அதிக அழகென்பது நிச்சயப்படவில்லை. எனிலும், விசாலாட்சியை மணம் புரிந்து கொள்வதே பொருந்து மென்ற யோசனை ஒருக்ஷணம் அவருக்குண்டாயிற்று. ஆயினும், காதல் வலியதன்றோ? காதலுக்கெதிரே எந்த சக்தி, எந்த யோசனை நிற்க வல்லது? காதல் இறுதியிலே வெற்றி பெற்றுத் தீரும். கோபாலய்யங்காரே! உம்முடைய விதி உறுதியாய் விட்டது. உமக்கு விசாலாட்சியை மணம் புரிந்து கொள்ளும் பாக்கியம் இனிக் கிடையாது. காதலை எதிர்த்து யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதன் போக்கு காட்டுத் தீயின் போக்கை யொத்தது. அது தானாகவே எரிந்து தணியவேண்டும். அல்லது, தெய்விகச் செயலாகப் பெருமழை பெய்து அதைத் தணிக்கவேண்டும். மற்றபடி, மனிதர், தண்ணீர்விட்டு அவிப்பது என்பது சாத்தியமில்லை. நெடுநேரம் போஜனத்தில் செலவிட்டார்கள். பல விஷயங்களைக் குறித்து சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கோபாலய்யங்கார் நாவிலிருந்து ரஸம் போய் விட்டது. அவர் அந்த அற்புதமான பக்குவங்களை ருசியின்றி உண்டார். |