பக்கம் எண் :

நந்தலால் பாட்டு

பந்துலுவின் மனைவியும் பந்துலுவும் எதிர்பார்த்தவண்ணம் அவர் நிறைய உண்ணவுமில்லை. ஒவ்வொரு வகையிலும் சிறிது சிறிதுண்டார். பேச்சிலும் அவருக்கு அதிக ரஸமேற்படவில்லை. ஆகாரம் முடிவு பெற்றது. படுக்கைக்குப் போகுமுன்னர் கோபாலய்யங்காரும் பந்துலுவும் படிப்பறையில் தனியே இருந்து வெற்றிலை போட்டுக் கொண்டார்கள். அப்போது பந்துலுவை நோக்கிக் கோபாலய்யங்கார் -

"பந்துலுகாரு, நான் விசாலாட்சியை விவாகம் செய்து கொள்ளப் போவதில்லை" என்றார். "ஏன்? அவளிடம் என்ன குறை கண்டீர்?" என்று பந்துலு கேட்டார்.

அதற்குக் கோபாலய்யங்கார் - "அவளிடம் நான் என்ன குற்றம் கற்பிக்க முடியும்? விசாலாட்சி சர்வசுப லக்ஷணங்களும் பொருந்தியவளாகவே இருக்கிறாள். எனிலும் மற்றொருத்திக்கு எனது நெஞ்சை நான் காணிக்கை செலுத்தி விட்டேன் மற்றொருத்தியின்மீது காதலுடையேன்" என்றார்.

"அதை நீங்கள் என்னிடம் காலையில் சொல்லவில்லையே? காலையில் விசாலாட்சியை மணம் புரிந்துகொள்ள மிகவும் ஆவலுடனிருப்பது போல் வார்த்தை சொன்னீர்களே? இப்போது திடீரென்று தங்களுடைய மனம் மாறியிருப்பதன் காரணம் யாது?" என்று பந்துலு வினவினார்.

"எனக்குக் காலையில் தெரியாது. எனது நெஞ்சை மற்றொருத்திக்குப் பறிகொடுத்து விட்டேன் என்ற செய்தி எனக்கு இப்போதுதான் தெரிந்தது" என்றார் அய்யங்கார்.

"அஃதெங்ஙனம்?" என்று பந்துலு கேட்டார். அப்போது கோபாலய்யங்கார் காலையிலே பூஞ்சோலையில் பணிப் பெண்ணும் குழந்தை சந்திரிகையுமிருப்பது கண்டு தாம் பணிப்பெண் மீது காமுற்ற செய்தியையும், அப்பால்