"அவன் எனது தம்பி. அவன் பெயர் சித்தரஞ்ஜனன். அவன் குழந்தைப் பருவமாயிருந்த போதிலும், எங்கள் குல தெய்வமாகிய காமதேவனுடைய அருள் பெற்றவனாதலால், குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவதிலே விருப்பமில்லாமல் கவிதைகள் புனைவதிலேயும், மோகனமாகிய பகற்கனவுகள் காண்பதிலேயும் பொழுது கழிக்கின்றான். ரோஜாப் பந்தை இந்தக் கிரீடராமன் மீது எறிந்த ரஸிகா என்ற அந்தக் கன்னிகையின் மீது சித்தரஞ்ஜனன் தெய்வீகமான காதல் செலுத்துகின்றான். இப்பொழுது அவன் ஏதோ கவிதை புனைகிறான் என்று தெரிகிறது. அவனை இங்கே அழைக்கிறேன். அவன் கவிதை கேட்பதில் உனக்குப் பிரியந்தானா?" என்றாள். நான் வியப்படைந்து, "எனக்கு அளவில்லாத பிரியம்" என்று சொன்னேன். பர்வதகுமாரி அவனிருக்குந் திசையை நோக்கிக் கையால் சைகை காட்டினாள். அவன் உடனே வான இறகுகள் விரித்துக் கண்ணிமைக்குமுன் நாங்களிருந்த உயர் வெளிக்கு வந்து விட்டான். பர்வதகுமாரி அவனைத் தழுவி முத்தமிட்டு, "இவர் நம் நாட்டிற்குத் தரிசனத்தின் பொருட்டு வந்திருக்கிறார். நமது விருந்தாளி" என்று என்னைக் காட்டினாள். பாலகன் என்னை நோக்கி "வந்தே" என்று வணங்கினான். நானும் அவனைத் தழுவி உச்சி மோந்து வாழ்த்துக் கூறினேன். பிறகு பர்வதகுமாரியைக் கடைக்கண்ணால் நோக்கிக் கவிதை விஷயத்தை நினைப்புறுத்தினேன். |