பக்கம் எண் :

பந்தாட்டம்

அவள் தம்பியைப் பார்த்து "ரஞ்சனா, இப்போது உன் மனதிற்குள்ளே ஒரு பாடல் புனைந்து கொண்டிருந்தாயே, அதைச் சொல். இவர் கேட்கவேண்டுமென்கிறார்" என்றாள்.

சிறுவன் சிறிது நாணமடைந்தான்.

நான் "குழந்தாய், லஜ்ஜைப்படாதே! சும்மா சொல்" என்றேன்.

அவன், மண்ணுலகத்துப் பிராகிருத பாஷையைப் போல் இருக்கும் இன்சொல் நிரம்பிய காந்தர்வ பாஷையிலே, ரஸிகா பந்தெறிந்ததன் பொருட்டுக் கிரீடராமன் சினமுற்றதைக் குறித்து ஓர் பாட்டுப் பாடினான். பர்வதகுமாரியின் தம்பியின் குரல் இன்பமாயிருந்ததென்று நான் எழுதவா வேண்டும்?

அவன் சொல்லிய பாடலை, எனது திறனற்ற தமிழ்ச் சொற்களிலே, சூரியனைச் சித்தரித்துக் காட்டுவதுபோல், ஒருவாறு மொழிபெயர்த்துக் காட்டுகிறேன்.

இடியேறு சார்பிலுற உடல் வெந்தோன் ஒன்றுரையா திருப்ப ஆலி முடியேறி மோதியதென் றருள் முகிலைக் கடுஞ்சொற்கள் மொழிவான் போலக் கடியேறு மலர்ப்பந்து மோதியதென் றினியாளைக் காய்கின்றானால் வடியேறு வேலெனவெவ் விழியேறி யென்னாவி வருந்தல் காணான்.

[இதன் பொருள்: - மேகத்திலிருந்து வெய்ய இடி தன் பக்கத்திலே விழ உடல் வெந்துபோனவன் ஒன்றும் சொல்லாது சும்மா இருக்க, ஆலங்கட்டி தலையிலே விழப்பெற்ற மற்றொருவன் மேகத்தின்மீது சினங்கொண்டு நிந்தை வார்த்தைகள் பேசுவது போல, வாசனை பொருந்திய ரோஜாப் பந்தைக் கொண்டு தன் மேலெறிந்துவிட்டாளென்று இன்ப வடிவத்தாளாகிய ரஸிகையைக் கோபிக்கின்ற இந்தக் கிரீடராமன் அவள் வடிவுற்ற வேல்களை எறிவதுபோல, விழிகளை என்மீது மோதிக்கொண்டே யிருப்பதால், என்னுயிர் வருந்துவதைக் காண்கிறானில்லை.]