"நான் என்ன செய்வேன், சாமி? வயதானவன். எனக்கு இனிமேல் இவ் வுலகத்தாசை ஒன்றுமேயில்லை. எனக்கினிப் பரலோகத்தைப் பற்றிய ஆசைகளே மிஞ்சி யிருக்கின்றன. அதனால் ஸ்ரீீமந் நாராயணனையும் ஆழ்வார்களையும் எம்பெருமானாரையும் ஸ்ரீவைஷ்ணவர்களையும் சரணாகதி யடைந்திருக்கிறேன். எப்போதும் இவர்களையே ஸ்மரித்துக் கொண்டும் இவர்களுக்கு என்னாலியன்ற கைங்கரியங்கள் செய்து கொண்டும் என் வாழ்நாளைச் செலவிடுகிறேன். நான் சாஸ்திரங்களில் நம்பிக்கையுடையவன். பிராமணருக்கு நான் சூத்திரப் பெண்ணைக் கலியாணம் செய்து கொடுப்பதனால் எனக்குப் பாவம் நேரும். ஆதலால், நான் இந்த விஷயத்துக்குச் சம்மதப்பட வழியில்லை" என்று சுப்புசாமிக் கோனார் சொன்னார். இதைக் கேட்டு கோபாலய்யங்கார் - "கோனாரே, முதலாவது, நான் பிராமணனில்லை. நான் பிராமண தர்மத்துக்குரிய ஆசாரங்களைத் துறந்து சூத்திரனாகி விட்டேன். ஆதலால் தாங்கள் என்னைத் தங்கள் ஜாதியானாகவே பாவித்து, எனக்குத் தங்கள் மகளை மணம் புரிவிக்க வேண்டுகிறேன். மேலும் நிஜமான பிராமணனே பிராமண குலத்தில் மாத்திரமன்றி மற்ற நான்கு வர்ணங்களிலும் பெண்ணெடுக்கலாமென்று சாஸ்திரம் சொல்லுகிறது. இந்த விஷயத்தில் உங்களுக்குச் சந்தேகமிருந்தால், என்னிடம் தமிழில் மனு ஸ்ம்ருதி இருக்கிறது; உங்களிடம் அந்த நூலைக் காட்டுகிறேன். அதை நீங்களே வாசித்துப் பாருங்கள். உங்களுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியுமோ, தெரியாதோ? தெரியுமா? அப்படியானால் நீங்கள் நான் சொல்வது மெய்யென்பதைக் கண்கூடாகப் பார்த்தறிந்து கொள்ளலாம். இதில் எவ்விதமான பாவத்துக்கும் இடமில்லை" என்றார். "அங்ஙனம் சாஸ்திரமிருப்பது மெய்தான்" என்று வேங்கடாசல நாயுடு சொன்னார். |