"ஆமாம்; அதுவே மனு ஸ்ம்ருதியின் கொள்கை" என்று வீரேசலிங்கம் பந்துலு கூறினார். "எனினும், உலக ஆசாரத்தில் அவ்விதம் வழங்குவதைக் காணோமே?" என்று சுப்புசாமிக் கோனார் ஆக்ஷேபித்தார். "நமது தேசத்தில் பூர்வ சாஸ்திரங்களுக்கும் நடைகளுக்கும் விரோதமான ஆசாரங்கள் பல பிற்காலத்தில் வழக்கமாய் விட்டன. அவற்றுள் இந்த விஷயமும் ஒன்றாம். இவ்விஷயத்தில் நமக்குத் தற்கால ஆசாரம் அதிகப் பிரமாண மன்று. முற்காலத்து சாஸ்திரமே அதிகப் பிரமாணம்" என்று கோபாலய்யங்கார் சொன்னார். அப்போது வேங்கடாசல நாயுடு சொல்லுகிறார்:- "கேளும், சுப்புசாமிக் கோனாரே! பாவம் என்பதெல்லாம் வீண் பேச்சு. இது சாஸ்த்ரோக்தமான விஷயம். இதில் யாதொரு பாவமும் கிடையாது. அப்படியே பாவமிருந்த போதிலும், அது மாப்பிள்ளையையும் பெண்ணையும் சாருமேயன்றி, உம்மைச் சாராது. அது தவறி, உமக்கும் சிறிது பாவம் வந்து நேரக்கூடுமென்றாலும், அதற்குத் தகுந்த பிராயச்சித்தங்கள் பண்ணிவிடலாம். பெருமாள் கோயிலுக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தினால் போதும். அதில் எவ்வளவு கொடிய பாவமும் வெந்து சாம்பராய்ப் போய்விடும். உமக்கு எத்தனை பணம் வேண்டுமானாலும் அய்யங்காரவர்கள் கொடுப்பார்" என்றார். பணம் என்ற மாத்திரத்திலே பிணமும் வாயைத் திறக்கும் என்பது பழமொழி. சுப்புசாமிக் கோனார் ஏறக்குறையக் கொட்டாவி யளவுக்கு வாயைப் பிளந்தார். "எனக்குக் கொஞ்சம் கடன் பந்தங்களும் இருக்கின்றன. அவற்றையுந் தீர்த்து வைக்க ஏற்பாடு செய்தால் நல்லது" என்று சுப்புசாமிக் கோனார் சொன்னார். |