"தங்களுக்கு எத்தனை ரூபாய்க்குக் கடன் இருக்கிறது?" என்று கோபாலய்யங்கார் கேட்டார். "ஆயிரம் ரூபாய் கடன் இருக்கிறது" என்றார் கோனார். "மூவாயிரம் ரூபாய் கொடுக்கிறேன்; போதுமா?" என்று கோபாலய்யங்கார் கேட்டார். "ஓ! யதேஷ்டம்! இந்த வாரத்துக்குள்ளேயே விவாகத்தை முடித்து விடலாம்" என்று சுப்புசாமிக் கோனார் சொன்னார். அப்பால், மீனாக்ஷியை அழைத்து அவளுடைய சம்மதத்தையும் தெரிந்து கொண்டால் நல்லதென்று கோபாலய்யங்கார் கூறினார். "அவள் இப்போது வீட்டிலில்லை. நானே அவளிடம் சொல்லி விடுகிறேன்; அவள் சிறு குழந்தை. அவள் பிறந்தது முதல் இதுவரை என் வார்த்தையை ஒரு முறைகூடத் தட்டிப் பேசியது கிடையாது. இப்போது, இத்தனை உயர்ந்த, இத்தனை மேன்மையான சம்பந்தம் கிடைக்குமிடத்தில் அவள் என் சொல்லைச் சிறிதேனும் தட்டிப் பேசமாட்டாள்" என்றார் கோனார். "எதற்கும் அவளை அழைத்து ஒருமுறை அவளிடமும் கேட்டால் தான் என் மனம் சமாதானமடையும். நாங்கள் இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறோம். அவளை அழைப்பியுங்கள்" என்று கோபாலய்யங்கார் சொன்னார். அங்ஙனமே கோனார் ஒரு ஆளைவிட்டு மீனாக்ஷியை அழைத்து வரும்படி செய்தார். மீனாக்ஷி வந்தாள். அவளைத் தனியாக அழைத்துப் போய் சுப்புசாமிக் கோனார் விஷயங்களைத் தெரிவித்தார். மாப்பிள்ளையின் படிப்பையும், செல்வத்தையும், பதவியையும் மிகவும் உயர்வாக்கி வர்ணித்தார். மாப்பிள்ளையின் அழகை அவள் பார்க்கும்படி அவரையும் காண்பித்தார். அவள் அவருக்கு வாழ்க்கைப்பட சம்மதமுற்றாள். |