சிறிது நேரத்துக்குள் மகளையும் அழைத்துக்கொண்டு சுப்புசாமிக் கோனார் புறத்து திண்ணைக்கு வந்து சேர்ந்தார். அவளுடைய விழிகளைக் கோபாலய்யங்கார் நோக்கினார். அவள் எதிர் நோக்களித்தாள். 'கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின், வாய்ச்சொற்கள் என்ன பயனுமில' என்றார் திருவள்ளுவ நாயனார். அவளைப் பார்த்த மாத்திரத்திலே தம்மை மணம் புரிய சம்மதப்பட்டு விட்டாளென்று கோபாலய்யங்காருக்குத் தெளிவாகப் புலப்பட்டு விட்டது. எனினும், பரிபூர்ண நிச்சயமேற்படுத்திக் கொள்ளுமாறு அவர் சுப்புசாமிக் கோனாரை நோக்கி, "மீனாக்ஷி என்ன சொல்லுகிறாள்?" என்று கேட்டார். "அவளிடத்திலேயே நேராகக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே" என்றார் கோனார். "என்ன மீனாக்ஷி? என்ன சொல்லுகிறாய்? என்னை மணம் புரிந்துகொள்ள சம்மதந்தானா?" என்று கோபாலய்யங்கார் கேட்டார். மீனாக்ஷி "சம்மதம்" என்று மெதுவாகக் கூறித் தலை கவிழ்ந்தாள். கோபாலய்யங்காருக்கு ஜீவன் மறுபடி உண்டானது போல் ஆயிற்று. அவர் முகத்தில் புன்னகை தோன்றிற்று. அந்த வாரத்திலேயே கோபாலய்யங்காரும் மீனாக்ஷியும் பிரமஸமாஜத்தில் சேர்ந்து கொண்டார்கள். அவ் விருவருக்கும் பிரம ஸமாஜ விதிகளின்படி, சென்னப்பட்டணத்தில் மேற்படி ஸமாஜக் கோயிலிலே விவாகம் நடைபெற்றது. விவாகம் முடிந்தவுடனே கோபாலய்யங்கார் தமது மனைவியை அழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்குப் போய் அங்கு தம் உத்தியோகத்தில் சேர்ந்து கொண்டார். |